திருநெல்வேலி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய்-மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அல்சூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (40). இவர் தனது தாய் பிரேமாதேவி (60), மனைவி சசிகலா (34), மகள் தனுஸ்ரீ (5) ஆகியோருடன் கேரளாவில் நடந்த கோவில் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். பின்பு அங்கிருந்து மீண்டும் பெங்களூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது நேற்று மதியம் நெல்லை அருகே சென்று கொண்டிருந்தபோது, சர்வீஸ் ரோட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொருங்கிய நிலையில் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது தாய் பிரேமாதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சசிகலா மற்றும் தனுஸ்ரீ ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.