புதுடெல்லி: அமெரிக்காவுக்கு 10 நாள் பயணமாக வரும் 31-ம் தேதி புறப்பட்டுச் செல்ல காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால், 3 நாட்களுக்கு முன்னதாக 28-ம் தேதி ராகுல் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 28-ம் தேதி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க வுள்ளார். இதில் பங்கேற்க எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும். அவதூறு வழக்கில் எம்.பி. பதவியை இழந்துள்ள ராகுல் காந்திக்கு இது தர்மசங்கடமாக இருக்கும். அந்த காரணத்தால், 3 நாட்கள் முன்னதாக 28-ம் தேதியே ராகுல் அமெரிக்க பயணம் மேற்
கொள்கிறார் என்று கூறப்படுகிறது.
ஆனால் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வரும் 29, 30-ம் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இந்தியர்களை சந்தித்து பேசுவதற்காக ராகுலின் பயணம், திட்டமிட்ட தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக தொடங்குகிறது என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி கடந்த மார்ச் மாதம் லண்டன் சென்றிருந்தபோது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கையாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது இந்தியாவுக்கு எதிராக அவர் பேசியதாகவும் அதற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் பாஜக.வினர் வலியுறுத்தினர்.
இச்சம்பவம் நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2-வது கூட்டத்திலும் எதிரொலித்தது. அதற்கு போட்டியாக அதானி குழும முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என காங்கிரஸ் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டது.
இதனால் நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2-வது கூட்டம் முற்றிலும் வீணானது. அதன்பின் அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு நீதிமன்றம் தண்டனை விதித்ததால், அவர் வயநாடு எம்.பி பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டார். இந்நிலையில் ராகுல் காந்தி அமெரிக்கா செல்கிறார்.