புதுடெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தில் நிர்வாக சேவைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்று மே 11- ம் தேதி 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
நாட்டின் தலைநகராகவும் யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் டெல்லியில் காவல் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. டெல்லியின் பாதுகாப்பு, அங்கு பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசு வசம் உள்ளது. இந்நிலையில், டெல்லி யூனியன் பிரதேசத்தின் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே உண்டு என்றும், இதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரி டெல்லி மாநில உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மே 11-ம் தேதி, நிர்வாக சேவைகளில் டெல்லி அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என்றும், மாநில ஆளுநர் அதற்கு கட்டுப்பட வேண்டும் என்றும் அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி அரசில் பணியாற்றும் பணியாளர்களின் பணி நியமனம் மற்றும் இடம் மாறுதல் போன்றவற்றில் இறுதி முடிவு எடுக்கும் நிர்வாக அதிகாரியாக துணைநிலை ஆளுநரை நியமிக்கும் அவசர சட்டம் ஒன்றினை மத்திய அரசு வெள்ளிக்கிழமை கொண்டு வந்தது. டெல்லியில் பணியாற்றும் குரூப் ஏ பணியாளர்கள் மற்றும் யூனியன் பிரதேச பணியாளர்களின் பணி நியமனம் மற்றும் இடமாற்றம் ஆகியவை குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட தேசிய தலைநகர் குடிமைப்பணி ஆணையம் ஒன்றினை உருவாக்க இந்தச் சட்டம் வழிவகை செய்யும்.
அச்சட்டத்தின்படி, இந்த ஆணையத்தின் தலைவராக முதல்வர் இருப்பார். தலைமைச் செயலாளர் மற்றும் முதன்மை உள்துறைச் செயலாளர் உறுப்பினர்களாக இருப்பர். அதிகாரத்தால் தீர்மானிக்கப்பட வேண்டிய அனைத்து விவகாரங்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களின் பெருவாரியான வாக்குகள் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும். ஒருவேளை தீர்மானத்தில் மாறுபாடு ஏற்படும்போது, துணை நிலை ஆளுநர் இறுதி முடிவினை எடுப்பார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மத்திய அரசு மற்றும் துணைநிலை ஆளுநர்களிடையே புதிய மோதல் போக்குக்கு வழிவகுத்துள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி கூறும்போது, மத்திய அரசின் இந்த அவசரச் சட்டத்தை ‘துரோக செயல்’ என்று கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டெல்லி பாஜக பிரிவு, இந்த நடவடிக்கை நாட்டின் நற்பெயருக்கு அவசியமான ஒன்று என்று மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ளது.