ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் | இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும்: கேஜ்ரிவால் விமர்சனம்

புதுடெல்லி: ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ‘இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23-ம்தேதி முதல் வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு செப்.30-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அனைத்து ரூ. 2000 நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ள நிலையில் வங்கிகள் அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், இதற்குத்தான் பிரதமர் படித்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “முதலில் ரூ.2000 நோட்டை கொண்டு வந்தால் ஊழல் ஒழியும் என்றனர். இப்போது, ரூ.2000 நோட்டை தடை செய்வதன் மூலம் ஊழல் தடுக்கப்படும் என்கின்றனர். இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். படிக்காத பிரதமரிடம் யாரும் எதுவும் சொல்லிவிட முடியும். அவருக்கு எதுவும் புரியாது. பொதுமக்கள் தான் கஷ்டப்படவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மோடியின் கல்வி ஆவணங்களை கோரி வழக்கு தொடுத்த, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அதற்கு கேஜ்ரிவால், “பிரதமர் எவ்வளவு படித்திருக்கிறார் என்று அறிந்துகொள்ள இந்த தேசத்துக்கு உரிமை இல்லையா? டிகிரி சான்றிதழை கோர்ட்டில் காண்பிக்க ஏன் இத்தனை தயக்கம்? ஆவணங்களை கோரியதற்கு அபராதம் விதிப்பதா? இங்கே என்ன நடக்கிறது? படிக்காத அல்லது குறைவாக படித்த பிரதமர் என்பது நாட்டுக்கு மிகவும் அபாயகரமானது” என்று எதிர்வினையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.