மும்பை: சீனா தனது நாட்டின் கடற்படையை வலுப்படுத்தி வருகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படை கப்பல்களின் போக்குவரத்தும் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் இந்திய கடற்படையில் உள்ள போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
‘புராஜெக்ட்-75’ திட்டத்தின் கீழ் பிரான்ஸ் கடற்படை குழுமத்துடன் இணைந்து 6 கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. கல்வாரி ரக நீர் மூழ்கி கப்பலில் இருந்து டார்பிடோ உட்படபல வகையான ஏவுகணைகளை ஏவ முடியும். இந்த நீர்மூழ்கி கப்பல்கள் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் (எம்டிஎல்) தயாரிக்கப்படுகின்றன.
இங்கு தயாரிக்கப்பட்ட 5 கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்கள் இந்திய கடற்படையில் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளன. தற்போது 6-வது கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கப்பட்டு பரிசோதனைக்காக நேற்று கடலில் இறக்கப்பட்டது. இதற்கு வக் ஷீர் என பெயரிடப்பட்டுள்ளது. இன்ஜின், ஆயுதங்கள், சென்சார்கள் ஆகியவை கடல் பயணத்தின் போது பரிசோதிக்கப்படும்.
பரிசோதனையை முடித்தபின், இந்த நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கப்பல் தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு ஊக்குவிப்பாக உள்ளது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.