சென்னை: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முடிவால் ஏழை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பணத்தை பதுக்கியவர்களுக்குத்தான் பாதிப்பு எனவும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறினார்.
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அடுத்து வரக்கூடிய காலத்தில் நாம் என்ன செய்ய போகிறோம் என்ற கொள்கை முடிவுகளை விவாதிக்க கூடிய இடமாக பாராளுமன்றம் இருக்காது. என்ன கேள்விகளோ.. அப்போதைக்கு அரசாங்கத்திடம் என்ன பதில் இருக்கிறதோ அதுதான் கிடைக்கும்.
எனவே இதற்கு முன்பாக அமைச்சர்கள் பதிலளித்து இருக்கிறார்கள் என்பது ஒரு விஷயம் அல்ல. நாட்டின் பொருளாதார நலனை கருதி அரசு இந்த முடிவை எடுத்து இருக்கிறது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அதிகப்படியாக கருப்பு பண புழக்கத்திற்கு காரணமாக இருக்கக் கூடும். நிறைய பணம் வெளியில் போனது வரவில்லை. ஆனால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் 2 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் புழக்கத்தில் இருக்கிறது.
பொருளாதார நடவடிக்கை என்பது தொடர்ச்சியான நடவடிக்கை. கருப்பு பணத்தை பதுக்குவதை தடுப்பதற்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது ஒவ்வொருத்தருடைய பணமும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணம் இன்னாருடையது என்று தெரிந்தது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா மாறி வருகிறது.
டிஜிட்டல் பொருளாதாரம் வந்து இருப்பதால் சாதாரண மக்களிடையே அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கருப்பு பணம் தடுப்பு நடவடிக்கையில் இதுவும் ஒரு அங்கமாக பார்க்கப்பட வேண்டும். ரூபாய்நோட்டுக்களே இல்லாத சூழல் எப்போது வரும் என்று தெரியாது. ஆனால் பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் மிக மிக குறைவாக உள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் விளைவை இன்றைக்கு நாம் பார்க்கிறோம். கொரோனா மாதிரியான எதிர்பாராத காலத்திற்கு பிறகு வளர்ந்த நாடுகள் கூட விலைவாசியை கட்டுப்படுத்த தடுமாறியது. ஆனால், நாம் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். உலக நாடுகள் மத்தியில் இருந்த பொருளாதார தேக்க நிலை கூட இந்தியாவை பாதிக்காத வகையில் ஆட்டம் காணாமல் இந்திய பொருளாதாரம் கடுமையான சூழலை சமாளித்து கொண்டு இருக்கிறது என்று சொன்னால் இதை பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் அடுத்த கட்டத்தையும் சேர்த்துதான் பார்க்க வேண்டும்.

இது ஒன்றுகொன்று தொடர்புடையது. தனியாக பார்க்க முடியாது. அண்டை நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியாவின் பொருளாதரம் பாதிக்கப்படாமல் இருக்கிறது என்றால் இதுவும் ஒரு காரணமாக உள்ளது. இது மட்டுமே காரணம் கிடையாது. இது மாதிரியான தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக இருக்கிறது. அதேபோல கிராமத்தில் இருக்கும் ஏழைகள் எத்தனை பேர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்து இருக்கிரார்கள். ஏழைகளிடம் அப்படியே இருந்தாலும் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அரசு சொல்கிறது.
எந்த ஏழையும் இதனால் பாதிக்கப்பட போவது இல்லை. எந்த ஏழையிடமும் கோடிக்கணக்கான ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் இல்லை. எங்கே இருக்கு என்று காங்கிரஸ் கட்சிக்கு தெரியும். எனவே யார் கோடிக்கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்து இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் பாதிப்பே தவிர சாதாரண மக்களுக்கோ ஏழை மக்களுக்கோ பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.