76 வது கேன்ஸ் திரைப்பட விழா மே 17 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மே 27 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்தத் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இந்திய நட்சத்திரங்கள் பலரும் பிரான்ஸ் சென்றிருக்கின்றனர்.
இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பல்வேறு படங்கள் திரையிடப்படும் அந்தவகையில் நேற்று ஹாரிசன் ஃபோர்ட் நடித்த ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆப் டெஸ்டினி’ படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. 1981ல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ஹாரிசன் ஃபோர்ட் நடிப்பில் வெளியான படம் இண்டியானா ஜோன்ஸ். உலகம் முழுவதும் புகழ்பெற்ற இந்தப் படத்தொடரில் 2008 வரை மொத்தம் 4 பாகங்கள் வெளியாகியுள்ளன.
இந்த நான்கு பாகங்களையுமே ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்தான் இயக்கியிருந்தார். ஆனால் இண்டியானா ஜோன்ஸின் 5வது பாகத்தை ‘லோகன்’ மற்றும் ‘ஃபோர்ட் vs ஃபெராரி’ புகழ் ஜேம்ஸ் மேன்கோல்டு இயக்கியிருக்கிறார். ஜூன் 30, 2023 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியமொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதுதான் கடைசி பாகம் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த 5 பாகங்களிலும் கதாநாயகனாக ஹாரிசன் ஃபோர்ட்தான் நடித்திருக்கிறார். தனது 39 வயதில் முதல் பாகத்தில் நடித்த ஹாரிசன் ஃபோர்ட் 80 வயதில் 5 பாகத்தில் நடித்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இண்டியானா ஜோன்ஸ் கதாபாத்திரத்துக்கு கண்ணீர் மல்க விடைகொடுத்துள்ளார்.
‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்ட்டினி’ திரையிட்டு முடிந்தபோது அங்கிருந்த அனைவருமே எழுந்து ஹாரிசன் ஃபோர்ட்டுக்கு கைகளைத் தட்டினர். பின் மேடையில் பேசிய ஹாரிசன் ஃபோர்ட், “ நான் மிகவும் வியப்படைந்து போயிருக்கிறேன். நாம் இறக்கும் தருவாயில் நம் வாழ்க்கை கண்முன் வந்து போகும் என்று சொல்வார்கள். இப்போது என் வாழ்க்கை கண்முன் நிற்கிறது. என் கனவுகள் நிறைவேற எனக்கு ஆதரவாக இருந்தவர் என் மனைவிதான். அவருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ரசிகர்களாகிய உங்களையும் நான் நேசிக்கிறேன். எனக்கு நீங்கள் அளித்த இந்த மரியாதைக்கு நன்றி என்று கண்ணீர் மல்க பேசியிருக்கிறார் ஹாரிசன் ஃபோர்ட்.