டெல்லிக்கு எதிரான போட்டியை சென்னை அணி வென்று ப்ளே ஆப்ச் சுற்றுக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. இந்தப் போட்டி முடிந்தவுடன் சென்னை அணியின் கேப்டன் தோனியும் ஆட்டநாயகன் ருத்துராஜ் கெய்க்வாட்டும் பேசியவை இங்கே.
கேப்டன் தோனி பேசுகையில், ‘வெற்றிக்கென எந்த ஃபார்முலாவும் கிடையாது. சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான உகந்த மற்றும் சௌகரியமான சூழலையும் இடத்தையும் அணிக்குள் உருவாக்கிட வேண்டும். அதற்காக சில வீரர்கள் தங்களின் இடத்தை கூட தியாகம் செய்ய வேண்டி வரும். மேலும் அணி நிர்வாகமும் ஒரு நல்ல சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. பயிற்சியாளர்கள் குழுவும் உதவியாளர்களும் எங்களுக்கு எப்போதுமே ஊக்கமாக இருக்கிறார்கள்.
டெத் பௌலிங்கை பொறுத்தவரை வீரர்களின் தன்னம்பிக்கைதான் ரொம்பவே முக்கியம். துஷார் தேஷ்பாண்டே தொடர்ந்து அழுத்தமான சூழல்களில் பந்துவீசி தன்னை மெருகேற்றிக் கொண்டார். அவரிடம் இப்போது பெரும் தன்னம்பிக்கை இருக்கிறது. பதிரனாவிடம் டெத் ஓவர்களில் வீசுவதற்கென்றே இயல்பிலேயே ஒரு திறன் இருக்கிறது. தனிப்பட்ட ரெக்கார்டுகளை மனதில் வைக்காமல் அணியின் நலனை மட்டுமே மனதில் வைத்து ஆடும் வீரர்களை தேர்ந்தெடுப்பது முக்கியம் என நினைக்கிறேன். நாக் அவுட்களில் வெல்ல அதுதான் சரியான அம்சமாக இருக்கும்.’ என்றார்.
ஆட்டநாயகன் விருதை வென்ற ருத்துராஜ் கெய்க்வாட், “இது கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டி. சென்னை அணிக்காக என்னுடைய 50 வது போட்டியும் கூட. இப்படி ஒரு முக்கியமான போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்ததில் மகிழ்ச்சி. குறைவான தூரமுடைய பவுண்டரிகளை டார்கெட்டாக வைத்து ஆடினேன்.
கான்வேக்கு சில ஏரியாக்களில் முன்னேற்றமடைய வேண்டிய தேவை இருந்தது. அவரும் நிறையவே முன்னேறியிருக்கிறார். சென்னையில் ஆடுவது ரொம்பவே கஷ்டம். ஆனால், அவர் அந்த சேப்பாக்க சூழலுக்கு தன்னை சிறப்பாக தகவமைத்துக் கொண்டார். அவர் எப்போதும் உரையாடலுக்கு தயாராக இருப்பார். களத்திற்கு வெளியே அவருடன் செலவிடும் நேரத்தையும் எப்போதுமே விரும்புவேன்.” என்றார்