How to: வாயுப் பிரச்னையில் இருந்து விடுபடுவது எப்படி? | How To Get Rid Of Gas Trouble?

வாயு சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் மூலம் நம் உடலில் ஏற்படும் பிரச்னைகள் அதிகம். Gas trouble, வயிறு உப்புசம் என்று நாம் குறிப்பிடும் இந்தப் பிரச்னை இருப்பவர்கள், சரியாக படுக்க முடியாமல், சாப்பிட முடியாமல் அவதிப்படுவார்கள்.

உடலில் ஒரு இடத்தில் வலி என்றால் அதனை உடனடியாகக் குணப்படுத்தலாம். ஆனால், வாயுப் பிரச்னையை அதுபோல சரி செய்ய முடிவதில்லை. ஏன் இந்த வாயுப் பிரச்னை ஏற்படுகிறது? தீர்வு என்ன? தவிர்க்க என்ன செய்வது? அரசு மருத்துவர் ராகவி விவரிக்கிறார்…

மருத்துவர் ராகவி

எதனால் ஏற்படுகிறது வாயுத்தொல்லை

சரியான அளவில் சரிவிகித உணவினை உட்கொள்ளாமல் இருப்பதுதான், இதற்கு மிக முக்கியமான காரணம். அதனால் புரதம், கார்ப்போஹைட்ரேட், கொழுப்பு என அனைத்தையும் உள்ளடக்கியதாக நம் உணவு இருக்க வேண்டும். முக்கியமாக, எண்ணெய் அதிகளவு சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதும், இந்தப் பிரச்னைக்கு காரணமாகிறது. நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள பல பிரச்னைகள் சரி செய்யப்பட வாய்ப்புகள் அதிகம். தினமும் தேவையான அளவு நார்ச்சத்து மிக்க உணவுகள், கீரை வகைகளைச் சாப்பிடுவது அவசியம்.

சாப்பிட்டவுடன் படுப்பது உப்புசத்தை அதிகப்படுத்தும். அதனால், முடிந்தவரை உணவு உண்டவுடன் படுப்பதை தவிர்க்கவும். அதேபோல், அதிக அளவில் உணவினை எடுத்துக் கொள்வது, உணவு அருந்திய பின் கார்பனேட் செய்யப்பட்ட சோடா குடிப்பது, கூல்டிரிங்க்ஸ் குடிப்பது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

வாயுப் பிரச்னை உள்ளவர்கள் ஜங்க் ஃபுட்டை தவிர்க்க வேண்டும். பருப்பு, எண்ணெய்ப் பலகாரங்கள் எனச் சிலருக்கு சில உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது வாயுத்தொல்லை ஏற்படுவதை கவனித்திருக்கலாம். அவர்கள் அந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் 20 நிமிடங்களாவது நீர் அருந்தாமல் இருப்பது உப்புசத்தை குறைக்கும்.

கீரை

வாயுப் பிரச்னைக்கு என்ன தீர்வு?

* வெந்நீர் அருந்துவது உப்புசத்தை குறைக்க உதவும். தினமும் எழுந்ததும் வெந்நீர் அருந்துவது நல்லது.

* பூண்டு சாப்பிடுவது நல்ல பலனை தரும். உங்களுக்கு வாயுப் பிரச்னையை ஏற்படுத்தும் என நினைக்கும் உணவு பொருள்களுடன் பூண்டு அதிகமாகச் சேர்த்துச் சமைக்கலாம்.

* ஆன்டசிட் மருந்துகளை, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி வாயுத்தொல்லை ஏற்படுகிறது என்றால், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதே நல்லது.

* காய்கறிகள், கீரைகள், பருவகால பழங்களை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஏப்பம் விட முடியாமல் இருப்பது, சரியாக மலம் வெளியேறாமல் இருப்பது, வாயு பிரியாமல் இருப்பது, வயிறு உப்பியது போல காணப்படுவது எல்லாமே வாயுப் பிரச்னையில் சேரும். இதுபோன்ற பிரச்னைகள் நாளடைவில் அல்சர் மற்றும் காஸ்ட்ரிக் (gastric) சம்பந்தப்பட்ட பிரச்னைகளை கொண்டுவரும் என்பதால், மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்வது அவசியம்’’ என்கிறார் மருத்துவர் ராகவி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.