அண்ணாமலைக்குள் ஒரு நித்யானந்தா.. அய்யய்யோ.. பங்கமாக கலாய்த்த பிரகாஷ்ராஜ்!

சென்னை:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்குள் ஒரு நித்யானந்தா இருக்கிறார் என நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல் செய்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என அண்ணாமலை கூறியதற்கு பதிலளித்து பிரகாஷ் ராஜ் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மையில் நடந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135-ஐ கைப்பற்றி அக்கட்சி அறுதி பெரும்பான்மையை பெற்றது. அதே சமயத்தில், பாஜகவோ வெறும் 66 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி ஆட்சியை இழந்தது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பல நாட்கள் முகாமிட்டு பிரச்சாரம் செய்த போதும் அங்கு ஆட்சியை நழுவவிட்டது அக்கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கர்நாடகா முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரும் நேற்று பதவியேற்றனர். முதல்வர் பதவியை பெற இவர்களுக்குள் மோதல் ஏற்படும் என பாஜக பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அதுவும் நடைபெறாதது அக்கட்சிக்கு மேலும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில், சென்னையில் நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் சித்தராமையா இரண்டரை ஆண்டுகளும், டிகே சிவக்குமார் இரண்டரை ஆண்டுகளும் முதல்வராக ஆட்சி செய்யப் போவதாக கேள்விப்பட்டேன். அதேபோல, சித்தராமையா, டிகே சிவக்குமார், மல்லிகார்ஜுனே கார்கே கட்டுப்பாட்டில் தலா 10 அமைச்சர்கள் இருக்கிறார்களாம். உலகில் வேறு எங்கும் இப்படியொரு கட்டமைப்பை பார்க்க முடியுமா? ஒரு மாநிலத்தில் அமைச்சர்கள் ஒரு முதல்வருக்கு கீழ்தான் பணிபுரிய வேண்டும்.

ஆனால் அங்கு மூன்று முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்குள் மோதல் உருவாகி 2024-ம் ஆண்டுக்குள் சீட்டுக்கட்டை போல காங்கிரஸ் சரிந்துவிடும். அப்படி அவர்களுக்குள் சண்டை வராவிடடால் சித்தராமையாவுக்கும், டிகே சிவக்குமாருக்கும் அமைதிக்கான நோபல் பரிசையே வழங்கலாம் என அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் அண்ணாமலையின் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பகிர்ந்தார். அதற்கு மேலே, “ஐபிஎஸ்ஸாக இருந்தாலும் அண்ணாமலைக்குள் ஒரு நித்யானந்தா இருக்கிறார். மக்கள் தூக்கி வீசியதில் கீழே விழுந்தாலும் கூட மீசையில் மண் ஒட்டவில்லையே எனக் கூறுவது முட்டாள்த்தனமானது” என பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.