டோக்கியோ: ஜப்பானில் ஜி7 மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் தான் பல்வேறு உலக நாடுகளின்பிரதிநிதிகள் மத்தியில் பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் ஜோபைடன் தேடி வந்தார். இதை கவனித்து பிரதமர் மோடி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி 6 நாள் சுற்றுப்பயணமாக 3 வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஜப்பான் சென்ற நிலையில் வரும் 24ம் தேதி வரை வெளிநாடுகளில் தான் இருக்கிறார். ஜப்பான் பயணத்தை முடிக்கும் பிரதமர் மோடி ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா நாடுகளுக்கும் செல்கிறார்.
ஜப்பானின் ஹிரோசிமா நகரில் ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு நடக்கிறது. ஜி7 நாடுகளாக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்டவை உள்ளன. இந்த ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பிற நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்வார்கள்.
அதன்படி தான் பிரதமர் மோடி ஜி7 உச்சிமாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக ஜப்பான் சென்றார். முதலாவதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் பிரதமர் மோடி இருநாடுகளின் உறவு பற்றி விவாதித்தார். அதன்பிறகு ஹிரோசிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதையடுத்து நேற்று ஜி7 நாடுகளின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதேபோல் பிற நாடுகளின் தலைவர்கள் அங்கு வந்திருந்தனர். அமெரிக்க அதிபர் ஜோபைடனும் அங்கு வந்தார். அப்போது பிரதமர் மோடியை பார்த்த ஜோபைடன் பூரித்த முகத்துடன் அவரை தேடிவந்தார். இதனை கவனித்த பிரதமர் மோடி தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து ஜோபைடனை நோக்கி சென்றார்.
இதையடுத்து ஜோபைடன்-பிரதமர் மோடியிடம் கைக்குலுக்கினார். இந்த வேளையில் பிரதமர் மோடி, ஜோபைடனை ஆரத்தழுவி நட்பு பாராட்டினார். இதையடுத்து இருவரும் கைகளை பிடித்தபடி சில வினாடிகள் பேசிக்கொண்டு சிரித்தபடி பிரிந்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
ஜி7 மாநாட்டை தொடர்ந்து ஜப்பான் ஹிரோசிமா நகரில் குவாட் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது பிற உலக நாடுகளிடன் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு உறவு பற்றி விவாதிக்கிறார். அதன்பிறகு ஜப்பான் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதையடுத்து மே 24ல் பப்புவா நியூ கினியாவுக்கு பிரதமர் சென்று இந்திய – பசிபிக் தீவு ஒத்துழைப்பு பேரவை கூட்டத்தில் பங்கேற்று நாடு திரும்ப உள்ளார். பப்புவா நியூ கினியா நாட்டுக்கு இந்திய பிரதமர்கள் யாரும் செல்லாத நிலையில் மோடி பயணிக்கிறார். இதன்மூலம் பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.