இரண்டு பேரின் உயிரை குடித்த மது இதுவா..? தஞ்சாவூர் டாஸ்மாக் பாரில் அதிர்ச்சி!

தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியில் உள்ள அரசு மதுபான கடை (கடை எண் 8123) இயங்கி வருகிறது. இந்த கடையில் உள்ள பாரில் இன்று காலை கள்ளச்சந்தையில் குப்புசாமி (60), விவேக் (36) ஆகிய இருவரும் கூடுதல் விலைக்கு மது பாட்டில் வாங்கி குடித்துள்ளனர். இதில் இரண்டு பேருக்கும் உடல்நலம் மோசமாகி குப்புசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விவேக் என்ற வாலிபர் சிகிச்சையில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பாஜகவினர் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து அவர்களை சமாதானப்படுத்தினார். இதனை அடுத்து பாரில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த பிளாக் பேர்ல் (Black Pearl) மது பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை குடித்து 20 க்கும் மேற்பட்டோர் உயிருக்காக போராடி அடுத்தடுத்து பலியாயினர். இந்த மரணங்கள் இன்னமும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கள்ளச்சாராயம் என்பதால் அதனை விஷ சாராயம் என்று அரசு விளக்கம் அழித்துவிட்டது. ஆனால், அரசு நடத்தி வரும் மது கடையிலேயே இருந்த சரக்கை வாங்கி குடித்து இரண்டு பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுவது உச்சகட்ட அச்சத்தை கொடுக்கிறது. இதற்கு அரசு என்ன விளக்கம் தர போகிறது என தெரியவில்லை.

ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 , பீருக்கு 20 இல் இருந்து 30 என மதுக்கடைகளில் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தாலும் மது பிரியர்கள் எந்த கேள்வியையும் கேட்காமல் வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில், தரமான மதுவையாவது அரசு வழங்கக்கூடாதா என்று மது பிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 12 மணிக்கு டாஸ்மாக் திறக்கப்படுவதற்கு முன்பும் இரவு 10 மணிக்கு மூடப்பட்ட பிறகும் கள்ளச்சந்தையில் மது விற்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயத்தை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் போலி மதுபானங்களால் மரணங்கள் தொடர்கின்றன.

எனவே, கள்ள சந்தையில் விற்கபடும் மதுபானங்கள் தமிழக அரசு காவல்துறையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் போலி மது பானங்களை தடுத்து மனித உயிர்களை காக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.