நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சரான டி.பி.எம்.மைதீன்கான் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாள்ர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அப்துல் வஹாப் மீது கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து புகார்கள் எழுந்தன. கட்சிக்காரர்களை அரவணைத்துச் செல்வதில்லை என்பது அவர்மீதான முக்கியக் குற்றச்சாட்டு.
பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அப்துல் வஹாப், அமைச்சரவை பட்டியலில் சேர்க்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடம் இருந்துவந்தது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசருக்குப் பதிலாக அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனதால், அவரும் அவரது ஆதரவாளர்களும் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். இந்த நிலையில், கட்சிப் பொறுப்பும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.
புகார் அளித்த கட்சியினர்!
அப்துல் வஹாப் வசமிருந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது குறித்து நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க-வினரிடம் பேசினோம். “தி.மு.க-வில் கானா என்கிற கருப்பசாமி பாண்டியன் கோலோச்சிய காலத்தில் அவருக்கு நெருக்கமானவர்போல கூடவே இருந்தவர், அப்துல் வஹாப். ஆனாலும் ‘கானா’வுக்குத் தெரியாமல் தனக்கு வேண்டப்பட்ட பலருக்கு பொறுப்புக் கொடுத்ததால், உள்கட்சித்தேர்தல் வந்தபோது கருப்பசாமி பாண்டியனின் மகனை எதிர்த்துப் போட்டியிட்டார்.
அதன் பின்னர் மாவட்டச் செயலாளராகத் தேர்வான அப்துல் வஹாப், தனக்கென ஆதரவாளர் கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டார். தனக்கு பொறுப்ப்பு கிடைக்கப் பாடுபட்ட பழைய நண்பர்களை எல்லாம் ஓரம்கட்டத் தொடங்கினார். அதோடு, கட்சியின் சீனியர்களான டி.பி.எம்.மைதீன்கான், மாலைராஜா, ஏ.எல்.எஸ்.லட்சுமணன் என யாரையும் மதிக்காமல் தன்னிசையாகச் செயல்பட்டார். அதனால் கட்சியில் அவருக்கான எதிரிகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருந்தார்கள்.
மாநகராட்சியில் மோதல்!
நெல்லை மாநகராட்சித் தேர்தல் சமயத்தில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே கவுன்சிலராக போட்டியிட வாய்ப்புக் கொடுத்தார். ஒரு சில வார்டுகளில் நின்றவர்கள், சென்னைக்குச் சென்று கட்சித் தலைமையிடம் முறையிட்ட பிறகே அவர்களுக்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டன. முன்னாள் எம்.எல்.ஏ-வான மாலைராஜா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
நெல்லை மாநகராட்சியை தி.மு.க கைப்பற்றியதும், தனக்கு நெருக்கமான மகேஸ்வரி என்பவரை மேயராக்க முடிவு செய்திருந்தார். கட்சித் தலைமை அதை ஏற்காததால் தனக்குக் கட்டுப்பட்டு நடப்பார் என்கிற நம்பிக்கையில், பி.எம்.சரவணனை மேயராக்கினார். அவரும் சில மாதங்கள் அப்துல் வஹாபுக்கு கட்டுப்பட்டு நடந்தார். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அப்துல் வஹாப் முயன்றதால், இருவருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
நெல்லை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் மக்கள் நலப் பணிகளுக்கான வேலைகள் தொடர்பான கமிஷனை பிரிப்பதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக பரவலாகப் பேச்சு எழுந்தது. மேயருடனான மோதலுக்குப் பிறகு தனது கட்டுப்பாட்டில் இருந்த கவுன்சிலர்கள் மூலம் மாநகராட்சிக் கூட்டங்களில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டது.
மாநகராட்சியில் முக்கிய தீர்மானங்களை மேயரால் நிறைவேற்ற முடியவில்லை. அதோடு, மாநகராட்சிக் கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர்களே வெளிப்படையாக மேயருக்கு எதிராகப் பேசத் தொடங்கினார்கள். அதோடு மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் தி.மு.க கவுன்சிலர்களே முட்டுக்கட்டை போட்டதால் மக்களிடம் அதிருப்தி எழுந்தது. இந்த விவரங்களும் கட்சித் தலைமையின் காதுகளுக்குச் சென்றன” என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.
மாநகரச் செயலாளருடன் மோதல்!
நெல்லை மத்திய மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப், தனக்குக் கட்டுப்பட்டு செயல்படுவார் என நம்பியவர்களால் பிரச்னைக்கு உள்ளானார். நெல்லை மாநகரச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான ஏ.எல்.எஸ்.லட்சுமணன் அவருடன் இணக்கமாகச் செயல்பட்டு வந்தார். ஆனால், அவரை மாற்ற கடுமையான முயற்சி மேற்கொண்டதன் பலனாக மாநகரச் செயலாளராக சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார்.
மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் அந்தப் பொறுப்புக்கு வந்த ஒரு மாதத்திலேயே அப்துல் வஹாபிடம் இருந்து விலகிச் செல்லும் அளவுக்கு நிலைமை உருவானது. ”கட்சியினர் அனைவரும் தனது சொற்படியே செயல்பட வேண்டுமென்று சர்வாதிகார போக்குடன் அபதுல் வஹாப் செயல்பட்டதன் விளைவே அவரிடம் இருந்து கட்சிப் பொறுப்பு பறிக்கப்படக் காரணம்” என்கிறார்கள், அப்துல் வஹாபுக்கு நெருக்கமானவர்கள்.
சில வாரங்களுக்கு முன்பு கட்சியின் பொதுச்செயலாளரான துரைமுருகன் நெல்லை மாவட்டத்தில் நடந்த அரசு மற்றும் கட்சி விழாக்களில் பங்கேற்றார். குமரி மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அவர் நெல்லைக்கு வந்தபோது பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு அப்துல் வஹாப் தலைமையில் ஓர் அணியாகவும், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மற்றொரு தரப்பினர் தனிக்குழுவாகவும் நின்றுகொண்டிருந்தனர். துரைமுருகன் வந்ததும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் ஆதரவாளர்கள் அங்கு வந்து சால்வை அளிக்க முயன்றபோது அப்துல் வஹாப் தரப்பினர் அவர்களைத் தடுத்து மோதலில் ஈடுபட்டதுடன், பட்டாசுகளைக் கொளுத்தி வீசினார்கள். துரைமுருகன் கண் முன்பாகவே நடந்த இந்த மோதலை அவர் ரசிக்கவில்லை. அதுவும் அப்துல் வஹாப் பொறுப்பு பறிபோனதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
இது தவிர, நில மோசடி புகாரிலும் அப்துல் வஹாப் சிக்கியுள்ளார். தனது நிலத்தை ஏமாற்றிவிட்டதாக அவர்மீது பெண் ஒருவர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியிருந்தார். உளவுத்துறை மூலம் அதை விசாரிக்க உத்தரவிட்ட முதல்வர், அப்துல் வஹாப் மீது அதிருப்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. இது தவிர, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடனும் அப்துல் வஹாப் மோதல் போக்கைக் கடைப்பிடித்தார்.
கட்சியினர் மற்றும் அதிகாரிகள் என யாரையும் அரவணைத்துச் செல்லாமல் தன்னிச்சையாகச் செயல்பட்ட காரணத்தால் அவர் பொறுப்பில் இருந்து தூக்கப்பட்டு, முன்னாள் அமைச்சரான டி.பி.எம்.மைதீன்கானுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் குறித்து அப்துல் வஹாப் தரப்பினரிடம் கேட்டதற்கு, “கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க அப்துல் வஹாப் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். அது சிலருக்குப் பிடிக்காததால் அவரை விமர்சித்தார்கள். சிலர் புகார் செய்தார்கள். மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அப்துல் வஹாப் கட்சிக்காக தொடர்ந்து செயல்படுவார்” என்கிறார்கள்.