"எங்கள் மீது சிறு கீறல் பட்டாலும் அவங்க காலி".. சீறிய வைத்திலிங்கம்.. பதறிய எடப்பாடி டீம்

சேலம்:
சேலத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி அணிக்கும், ஓபிஎஸ் அணிக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம், “எங்கள் மீது ஒரு சின்ன கீறலோ, ஒரு சொட்டு ரத்தமோ வந்தால் அவர்கள் 10 சொட்டு ரத்தம் சிந்த வேண்டி இருக்கும்” எனக் கூறினார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, சமீபகாலமாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

அண்மையில் கூட தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் இபிஎஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இது முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அதுமட்டுமல்லாமல், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தின் கோட்டையாகவும் இது விளங்குகிறது.

சேலத்தில் பயங்கர மோதல்:
இந்த சூழலில், இபிஎஸ்ஸின் சொந்த ஊரான சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். இதற்காக சேலத்தில் நேற்று மூன்று இடங்களில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் சார்பில் நடப்பட்டிருந்த அதிமுக கொடிகளை இபிஎஸ் ஆதரவாளர்கள் அகற்றினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பலர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

“ஒரு சொட்டு ரத்தம் வந்தால்”..
இந்நிலையில், தருமபுரியில் இன்று செய்தியாளர்களை வைத்திலிங்கம் சந்தித்தார். அப்போது அவரிடம் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டனாரமே என்று நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு அவர், யாரையும் யாரும் அடிக்கல. எங்க மேல சின்ன கீறல் பட்டாலோ, ஒரு சொட்டு ரத்தம் வந்தாலோ அவங்க பத்து சொட்டு ரத்தம் சிந்தனும். அது அவங்களுக்கும் தெரியும். எவனும் வெளியே வர முடியாது. உன் ஊருன்னு சொல்லி நீ செஞ்சேன்னா, அதுக்கு அப்புறம் உன் ஊருக்குள்ளேயே தான் இருக்கனும். வெளியே வர முடியாது” என்றார்.

“நான் அரசியல் அனாதையா?”..
முன்னதாக, “இபிஎஸ் ஆதரவாவளர் காமராஜ், உங்களை அரசியல் அனாதை என்கிறாரே” என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “ஆதாயத்துக்காக யார் காலில் வேண்டுமானாலும் விழும் நபர்தான் காமராஜ். இபிஎஸ் காலில் குடும்பத்துடன் விழுந்து கிடந்தவர் அவர். அதற்கு முன்பு யார் யார் கால்களில் அவர் விழுந்தார் என்று எனக்கு தெரியும். என்னை பற்றி பேச அவருக்கு தகுதியே கிடையாது” என வைத்திலிங்கம் கூறினார்.

ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் வைத்திலிங்கம் திமுகவுக்கு செல்லவுள்ளதாக சமீபகாலமாக ஒரு பேச்சு அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.