தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட புதுக்கிராமத்தின் சாலையில் ஆக்கிரமிப்பில் இருந்த டீக்கடையை நகராட்சி அதிகாரிகள் இடித்ததால் ஆத்திரமடைந்த பெண், முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தனது கடையை மட்டும் இடித்து ஏன் ? என்று கேட்டு, சாலையில் பெஞ்சை போட்டு தனியாக மறியல் செய்தது மட்டுமின்றி, நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கேள்விகளை கேட்டு ருத்ரதாண்டவம் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட புதுக்கிராமத்தின் மெயின் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை நகராட்சி அலுவலர்கள் திடுதிப்பென்று மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் மகேஸ்வரி என்பவர் நடத்தி வந்த டீ கடையை, நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு இடித்ததாக கூறப்படுகிறது.
அந்த சாலையில் உள்ள மற்ற கடைகளின் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றாமல், தனது கடையை மட்டும் வேண்டுமென்றே இடித்து விட்டதாக கூறிய மகேஸ்வரி, கண்ணீருடன் சாலையில் பொருட்களை எடுத்துபோட்டு, பெஞ்சில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் இடிக்கப்பட்ட கடைக்கு ஓடி சென்று செங்கலை எடுத்து எறிந்தது மட்டுமின்றி, தன்னுடைய கடை இடிக்கப்பட்ட ஆத்திரத்தில் நகராட்சி நிர்வாகத்தினை தனது வார்த்தைகளால் துளைத்து எடுத்தார்.
போலீசார் வந்து மகேஸ்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர் தனது ஆக்ரோஷத்தினை குறைக்கவில்லை, நான் எந்த அரசியல்வாதியிடமும் பணம் வாங்கியது இல்லை, நகராட்சி நிர்வாகம் சொன்னதும், முதல் நபராக நான் தான் பொருட்களை ஒதுக்கி வைத்தேன், ஆக்கிரமிப்பை அகற்ற 6 மாதம் ஆகும் என்று கவுன்சிலர்கள் கூறிவிட்டு, தற்போது தனது கடையை இடித்து ஏன் ? என்று அடுத்தடுத்து கேள்விகளை கேட்டு காவல்துறையினரை அலறவிட்டார்.
தனது கடையை வைத்து நிறைய கால்நடைகள் வாழ்ந்து வருவதாகவும், கடையை இடித்தால் இனி அந்த கால்நடைகள் எங்கு செல்லும், தினமும் நாய்கள், பசுமாடுகள் கடைக்கு வரும் என்றும், அதற்கு உணவளித்து வந்ததாகவும், இனிமேல் அதற்கு நான் எப்படி உணவு கொடுப்போன் என்றும் கண்ணீருடன் மகேஸ்வரி தனது வேதனையை தெரிவித்தார்.
காவல்துறையினரும், அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்த, ஒருவழியாக சற்று ஆவேசம் குறைந்த மகேஸ்வரி, தனது போராட்டத்தினை கைவிட்டார். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு எடுப்பதற்கு முன், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து இருந்தால் போலீஸ் பாதுகாப்புடன் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றி இருக்கலாம், பிரச்சினை ஏற்பட்ட பின்னரே நகராட்சி அதிகாரிகள் தகவல் கொடுப்பதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வித பாரபட்சமும் இல்லாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என்றும், இதுகுறித்து ஒரு வாரத்திற்கு முன்பே முறையாக தெரிவித்து, கால அவகாசம் கொடுத்துதான், ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதாகவும் நகராட்சித்தரப்பில் தெரிவித்தனர்.