சான் சல்வடோர்: எல் சால்வடோர் நாட்டில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோர் நாட்டின் தலைநகர் சான் சால்வடோரில் உள்ள கஸ்கட்லான் மைதானத்தில் நேற்று (மே 20) அலியான்ஸ் மற்றும் FAS ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு ஸ்டேடியத்தில் நுழைந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் பலரும் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர்.
இந்த நெரிசலில் இதுவரை 12 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சிறுவர்கள் உள்ப்ட 90 பேர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு மருத்துவக் குழுக்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சால்வடோர் சுகாதாரத்துறை அமைச்சர் ஃபிரான்சிஸ்கோ அலாபி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று சல்வடோர் அதிபர் நயீப் புகேலே உறுதியளித்துள்ளார்.
“கால்பந்து அணிகள், மைதானத்தின் மேலாளர்கள், டிக்கெட் அலுவலகம், கூட்டமைப்பு உள்ளிட்ட அனைவரும் விசாரிக்கப்படுவார்கள். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.