கண்டி மறைமாவட்ட ஆயரை ஜனாதிபதி சந்தித்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (20) கண்டியில் உள்ள ஆயர் இல்லத்திற்குச் சென்று கண்டி மறைமாவட்ட ஆயர் கலாநிதி பேரருட்திரு வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையை சந்தித்தார்.

வீட்டுப் பிரச்சினை உட்பட, பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்னும் அவர்களின் நல்ல வாழ்க்கைத் தரத்திற்கு உத்தரவாதம் வழங்கப்படாமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மத்திய மாகாணத்தில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது, ஆயர், ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததுடன், ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவினால் இச்சந்தர்ப்பத்தில் ஆயர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரையும் ஒருங்கிணைத்து சில பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.

அத்துடன், நுவரெலியா மற்றும் ஏனைய பெருந்தோட்டங்களின் வீதிக் கட்டமைப்பு சேதம் அடைந்துள்ளதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்த ஆயர், வீதிக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்துதருமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.

ஆயர் பிரிவின் அருட்தந்தையர், மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, சனத் நிஷாந்த, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் .யூ. கமகே, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.