சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 800 காளைகள் பங்கேற்றன. மாடு முட்டியதில் 60 பேர் காயமடைந்தனர்.
கிருங்காகோட்டையில் உள்ள கலியுக மெய் அய்யனார் புரவி எடுப்பு திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 800 காளைகள் பங்கேற்றன. 200 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஏர்கூலர், கட்டில், சைக்கிள், சீலிங் பேன், டைனிங் டேபிள், அண்டா, குடம், குக்கர், மிக்சி உள்ளிட்ட பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.
மேலும் மாடு முட்டியதில் 60 பேர் காயமடைந்தனர்.இதில் படுகாயமடைந்த பார்வையாளர் தொந்திலிங்கபுரத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணு (60), அழகாபுரியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் பாலமுருகன் (22) உள்ளிட்ட 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன், கோட்டாட்சியர் பால்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.