சிவகங்கை: கூட்டுறவு வங்கிகளில் தவறான முறையில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எச்சரித்துள்ளார்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.30.5 கோடியில் கூடுதல் அவசர கால தாய்சேய் நல சிகிச்சை மையம் மற்றும் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப்பிரிவு கட்டிடத்துக்கான பூமி பூஜை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் (பொ) மணிவண்ணன், மருத்துவக் கல்லூரி டீன் சத்தியபாமா, நகராட்சித் தலைவர் சிஎம்.துரைஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”2,000 ரூபாய் பணப் பரிவர்த்தனையில் தேசிய வங்கிகளுக்கான விதிமுறையே கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். காலக்கெடு வரை ரேஷன் கடைகள் மட்டுமின்றி அனைத்துக் கடைகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம். கடந்த காலத்தில் பணமதிப்பிழப்பு செய்தபோது, அதிமுக அரசு கூட்டுறவு வங்கிகள் பணத்தை மாற்றியது என திமுக குற்றம் சாட்டியது. அதே தவறு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நடக்காது. கூட்டுறவு வங்கிகளில் தவறான முறையில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் அவசர கால தாய்சேய் நல சிகிச்சை மையம் மற்றும் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப்பிரிவு கட்டிடத்துக்கான பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன். உடன் மாவட்ட ஆட்சியர் (பொ) மணிவண்ணன்.