டாஸ்மாக் பாரில் மது குடித்தவர் பலி.. தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தை உலுக்கிய கள்ளச்சாராய மரணங்கள் பொது மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தஞ்சை அருகே டாஸ்மாக் பாரில் மது குடித்த முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கீழவாசல் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடை இன்று திறப்பதற்கு முன்பே முதியவர் ஒருவர் கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து மது வாங்கியுள்ளார். அதை குடித்தவரின் உடல்நிலை மோசமாகியுள்ளது. பின்னர் அந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

அதேபோல, பாரில் மது வாங்கி குடித்த இளைஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுக்க இயங்கி வரும் 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளும் தினமும் மதியம் 12 மணிக்கு திறக்கப்படுகின்றன. ஆனால், அதுவரை காத்திருக்க முடியாத மது பிரியர்கள் ஒரு குவாட்டருக்கு கூடுதலாக 60 ரூபாய் வரை கொடுத்து கள்ளச்சந்தையில் மது வாங்குகின்றனர்.

மேலும், அந்த பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் இயங்கி வரும் பாரிலேயே கள்ளத்தனமாக விற்கப்பட்டு வருகின்றன. இதற்கு அந்தந்த பகுதியில் உள்ள கட்சி பிரதிநிதிகள், பார் உரிமையாளர்கள், போலீசார் வரை கமிஷன் செல்கிறது என குற்றசாட்டு உள்ளது.

இவ்வாறு பல பகுதிகளில் மதுக்கடை இரவு மூடிய பிறகும், காலை திறக்கும் முன்பே பார் மூலமாக கள்ளசந்தையில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தெரியுமா அல்லது கண்டும்காணாமல் உள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது.

மது பாட்டில்களில் ஒட்டப்பட்டுள்ள எம்ஆர்பி விலையைவிட ஒவ்வொரு பாட்டிலுக்குள் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கும் டாஸ்மாக் நிர்வாகம் அந்த மதுவை தரமாகவும் கொடுப்பதில்லை என்ற குற்றசாட்டும் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.