புதுடெல்லி: ‘‘பட்டியல் இனத்தவரை, ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டுவதை வைத்து மட்டும், அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கூடாது. பொது இடத்தில் சாதியை இழிவுபடுத்தி திட்டியிருந்தால் மட்டுமே வழக்கு பதிய வேண்டும்’’ என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: எஸ்.சி., எஸ்.டி இனத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக ஒருவர் தகாத வார்த்தைகளை கூறுவதால் மட்டும் அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர், பொது இடத்தில் ஒருவரை சாதி ரீதியாக இழிவுபடுத்தியிருந்தால் மட்டுமே அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். புண்படுத்தும் அல்லது அவமானப்படுத்தும் வார்த் தைகளை கூறுவதை வைத்து அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கூடாது.
எஸ்.சி., எஸ்.டி நபரை, ஒருவர் பொது இடத்தில் முட்டாள் என்றும், திருடன் என்றும் கூறி அவமானப்படுத்துதை எல்லாம் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கூடாது. சாதி ரீதியாக இழிவுபடுத்தியிருந்தால் மட்டுமே எஸ்.சி., எஸ்.டி சட்டத்தின் 3(1)(எக்ஸ்) பிரிவின் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இந்த வழக்கில், வாய் தகராறின்போது சாதியை இழிவுபடுத்தி திட்டியதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. ஒருவரை அவரது மனைவி மற்றும் மகன் முன்திட்டியதாக மட்டும் கூறப்பட்டுள்ளது. அங்கு பொது மக்கள் யாரும் இல்லை. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
சட்டத்தை நீர்த்து போகச் செய்யுமா?: உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் அரசு வழக்கறிஞர் பெ.து.அன்பரசன் கூறியதாவது: சாதீய வன்மத்துடன் இல்லாத வார்த்தைகளுக்காக இந்த சட்டத்தை பயன்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஷரத்து 17-ல் எது சாதீய வன்மம், எது வன்மம் இல்லை என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகள் இந்த சட்டத்தையே நீர்த்துப் போக செய்யும் அளவுக்கு முரண்பட்டு உள்ளன. வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை எவ்வாறு ஏற்க முடியாதோ அதேபோல் சாதீய வன்மங்களை திணிக்க முற்படும் நபர்கள், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.