சென்னை கோவளம் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ற 27 வயதான இளைஞர், மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் தொடர் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். ஒரு வருட காலப் பயிற்சிகளை எடுத்து, ஆறு மலை உச்சிகளில் ஏறி தன்னை தயார்படுத்திக் கொண்ட ராஜசேகர், கடந்த ஏப்ரல் 13- ஆம் தேதி அன்று எவரெஸ்ட் மலை அடிவார முகாமில் இருந்து தொடங்கி, 8,850 மீட்டர் உயரத்தை மே 19- ஆம் தேதி அதிகாலை 05.30 மணிக்கு கடந்து எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்தார்.
சாதனை படைத்த ராஜசேகருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும், தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள். அந்த வகையில் கோவளத்தைச் சேர்ந்த இராஜசேகர் பச்சை எனும் இளைஞர், உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தைத் தன் விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு எனது பாராட்டுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.