‘மாமன்னன்’ படத்திற்கு முன்பாகவே இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் துருவ் – மாரி செல்வராஜ் படம் ஆரம்பித்திருக்க வேண்டியது. உதயநிதி எம்.எல்.ஏ ஆகிவிட, பிரசாரத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தார். அதனால் சினிமாவிற்கான நேரம் ஒதுக்க முடியாததால் சினிமாவை விட்டு வெளியே வர முடிவு செய்தார். அதற்கு முன்பாக பெயர் சொல்லும்படியாக ஒரு படத்தோடு விடைபெற வேண்டும் என்ற முடிவில் ஆரம்பித்தது தான் ‘மாமன்னன்’. உதயநிதியே கேட்டுக் கொண்டதால் ரஞ்சித்தும், விக்ரமும் அந்தப் படத்தை முதலில் ஆரம்பிக்கப் பச்சைக்கொடி காட்டினார்கள்.
இப்போது ‘மாமன்னன்’ படம் ரெடியாகி எடிட்டிங் முடிவுக்கு வந்து, இசைக்காக மட்டும் ஏ.ஆர்.ரஹ்மானுக்காகக் காத்திருக்கிறது. இது இப்படி இருக்க, அடுத்து ‘வாழை’ என ஒரு சிறிய படம் முடித்துவிட்டு, துருவ் படத்திற்கான தீவிரமான வேலையில் இறங்கிவிட்டார் மாரி. லண்டனில் விடுமுறையிலிருந்த துருவ்வை சென்னைக்குச் சீக்கிரமாய் திரும்பி வரச் சொல்ல, அவரும் அடித்துப் பிடித்து வந்து சேர்ந்துவிட்டார். வந்து சேர்ந்தவரிடம் படத்தின் திருத்தப்பட்ட ஸ்கிரிப்ட்டைப் படிக்கக் கொடுத்திருக்கிறார்.
ஒரு சிஷ்யன் போலவே முழு அடக்கத்தோடு ஒரே ராத்திரியில் படித்துவிட்டு படம் குறித்த விஷயங்களைத் தெரிந்து கொண்டாராம் துருவ். அதோடு அவரை திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்துவிட்டார் மாரி செல்வராஜ். அங்குக் கபடி பயிற்சியாளர் ஒருவரிடம் முழு நேரப் பயிற்சிக்கு அவரை அனுப்பியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு முழுமையான கபடி விளையாட்டு வீரரைப் பிரதிபலிக்க வேண்டும். அப்படியாக துருவ் ரெடியாகி இருக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம். ஒரு வீடு எடுத்து அதிலேயே விளையாட்டு வீரர்களோடு தங்கும்படி செய்திருப்பதால் புது அனுபவத்தில் உற்சாகமாகி இருக்கிறாராம் துருவ்.