இந்தியாவில் ஏற்கெனவே மக்களவை, மாநிலங்களவைகளைக் கொண்ட நாடாளுமன்றம் இருக்கையில், புதிதாக வேறொரு நாடாளுமன்றத்தை எழுப்ப நீண்டகாலமாக பா.ஜ.க அரசு முனைப்பு காட்டிவந்தது. அதோடு நிற்காமல், 2020-ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய நாடாளுமன்றமானது, தற்போது அதன் வேலைப்பாடுகள் முடிந்து திறப்பு விழாவுக்கே ரெடியாகிவிட்டது.
அதுவும் 971 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்த புதிய நாடாளுமன்றத்தை சாவர்க்கர் பிறந்தநாளான மே 28-ம் தேதி பிரதமர் திறந்துவைப்பார் என தகவல்களும் வெளியாகிவருகின்றன. ஏற்கெனவே புதிய நாடாளுமன்றம் எதற்கு, இது வீண் செலவு என எதிர்க்கட்சிகள் விமர்சித்துவந்த நிலையில், தற்போது சாவர்க்கர் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றத்தை திறக்கக் கூடாது என எதிர்ப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறக்கக் கூடாது என ராகுல் காந்தி கூறியிருக்கிறார். இது குறித்து ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், “புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும், பிரதமர் அல்ல!” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைசியும், “பிரதமர் எதற்கு நாடாளுமன்றத்தை திறக்கவேண்டும். நிர்வாகத்துக்குத்தான் இவர் தலைவரே தவிர நாடாளுமன்றத்துக்கு அல்ல. மேலும் இது மக்கள் பணத்தில் கட்டப்பட்டது. இப்படியிருக்க பிரதமர் ஏன் தனது நண்பர்கள் ஸ்பான்சர் செய்தது போல நடந்துகொள்கிறார்” என ட்வீட் செய்திருக்கிறார்.
சி.பி.ஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, “புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது அப்பட்டமான அவமதிப்பு. இது அவரின் பதவியை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது” என எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.