சென்னை : சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன், நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடித்த படம் விக்ரம்.
இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தியன் 2 படத்தில் கமல் நடித்து வருகிறார்.
நடிகர் கமல்ஹாசன்: சினிமாவை வெறும் பொழுதுபோக்காகவும், பணம் ஈட்டும் தொழிலாக பார்க்காமல், பல புதுமைகளை சினிமாவில் புகுத்தி ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், ஹீரோ என்றால் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று எழுதப்படாத இலக்கணத்தை உடைத்தவர் உலக நாயகன் கமல்ஹாசன்.
பல திறமைகளை கொண்ட கமல்: நடிகர், இயக்குநர், பின்னணி பாடகர், நடன இயக்குநர், பாடலாசிரியர், கதாசிரியர், அரசியல்வாதி என பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கிறார் கமல். இவர் நடிகராக மட்டுமல்லாது ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற தேர்தல் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார். மேலும் சினிமா சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளிலும் கமல்ஹாசன் அவ்வப்போது பங்கெடுத்தும் வருகிறார்.
பல விருதுகள் : கமலின் நடிப்பு திறமையை பாராட்டி 19 பிலிம்பேர் விருதுகள்,10 தமிழக அரசு விருது, தேசிய விருது, மத்திய அரசின் உயரிய விருதாக கருதப்படும் பத்மஸ்ரீ விருது பத்மபூஷண் விருது, நந்தி விருது என பல்வேறு விருதுகளை நடிகர் கமல்ஹாசன் பெற்று இருக்கிறார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது : இந்நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற மே 27ந் தேதி அபுதாபியில் நடைபெற உள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கமல் இவ்விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய சினிமாவில் சிறப்பாக பங்காற்றியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. இந்த செய்தி சோஷியல் மீடியாவில் வைரலானதை அடுத்து ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அவரது தீவிர பலர் என பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.