புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மத்திய அரசு ஊழியர்கள், பென்ஷன்தாரர்கள் நாடெங்கிலும் உள்ள 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் (போபால், புவனேஸ்வர், பாட்னா, ஜோத்பூர், ராய்ப்பூர், ரிஷிகேஷ்) பணம் செலுத்தாமல் சிகிச்சையைப் பெற முடியும்.
இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மத்திய அரசின் சுகாதார சேவைத் திட்டப் பிரிவு (சிஜிஎச்எஸ்), எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் ஆகியவற்றின் இடையே கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த 20-ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது பணத்தை செலுத்திவிட்டு அதை திரும்ப வாங்குவது தொடர்பாக எழும் சிக்கல்களைத் தவிர்க்கவே இந்த ‘கேஷ்லெஸ்’ வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறும்போது, “மத்திய அரசின் சுகாதார சேவைத் திட்டம் (சிஜிஎச்எஸ்) மூலம் மத்திய அரசு ஊழியர்கள், பென்ஷன்தாரர்கள் சிறந்த மருத்துவ சேவைகளை நாடு முழுவதும் பெற முடியும். தற்போது 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் வசதியைக் கொண்டு வந்துள்ளோம்’’ என்றார்.