கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை போராடிய லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி 1 ஓட்டத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ
இந்த வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் கரண் சர்மா களம் இறங்கினர். இதில் கரண் சர்மா 3 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
இதையடுத்து களம் இறங்கிய மன்கட்(26), ஸ்டோய்னிஸ்(0), க்ருணால் பாண்ட்யா(9), டி காக்(28) ஓட்டங்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த பூரன், பதோனி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி 25 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். மறுபுறம் பூரன் 30 பந்துகளில் 58 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
இறுதியில் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
மரண பயத்தை காட்டிய ரிங்கு சிங்
தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இதில் ஜேசன் 28 பந்துகளில் 45 ஓட்டங்கள் குவித்து க்ருணால் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயர் 15 பந்துகளில் 24 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
எஞ்சிய வீரர்கள் எவரும் சோபிக்காத நிலையில், லக்னோ அணிக்கு மரண பயத்தை காட்டினார் ரிங்கு சிங். 33 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 6 பவுண்ட்ரிகளை பறக்கவிட்ட அவர், 67 ஓட்டங்கள் குவித்து கடைசி வரையில் ஆட்டமிழக்காமல் நின்றார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 175 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில், லக்னோ அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.