மஷ்ரூம் பணியாரம், பொட்டேட்டோ லாலிபாப், வாழைக்காய் ஜாமூன்… வீக் எண்டுக்கு புதுமை உணவுகள்!

வார நாள்களில்தான் ஆளாளுக்கு அவசரம்… இருப்பதை வைத்து எதையோ சமைத்துச் சாப்பிட்டு ஓடுகிறோம். வார இறுதியில் ஆற அமர, நிதானமாகச் சமைத்து நிறைவாகச் சாப்பிடலாம்தானே… அப்படி ஆசைப்படுவோருக்கு எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான ரெசிப்பீஸ் இங்கே… இந்த வார வீக் எண்டை புதுவித உணவுகளோடு உற்சாகமாகக் கொண்டாடுங்கள்…

ம்யூஸ்லி மஷ்ரூம் பணியாரம்

தேவையானவை:

மைதா மாவு – ஒரு கப்

ம்யூஸ்லி – அரை கப் (சர்க்கரை சேர்க்காதது)

முட்டை – 2

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பொடியாக நறுக்கிய குடமிளகாய் – கால் கப்

மஷ்ரூம் – 4 (பொடியாக நறுக்கவும்)

பால் – அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது)

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ம்யூஸ்லி மஷ்ரூம் பணியாரம்

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், குடமிளகாய், மஷ்ரூம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும். மைதா மாவுடன் ம்யூஸ்லி, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

பிறகு முட்டையை உடைத்து ஊற்றி, பால் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். இதனுடன் காய்கறிகளைச் சேர்த்துக் கலக்கவும். பணியாரக்கல்லைச் சூடாக்கி, குழிகளில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். புதினா சட்னியுடன் பரிமாறவும்.

சின்டா சிகுரு பொட்டேட்டோ லாலிபாப்

தேவையானவை:

உருளைக்கிழங்கு – 2

பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

வறுத்த கடலை மாவு – கால் கப்

சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

அரைக்க:

பிஞ்சு புளியந்தழை – முக்கால் கப்

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

சின்டா சிகுரு பொட்டேட்டோ லாலிபாப்

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசிக்கவும். இதனுடன் பனீர் துருவல், கடலை மாவு, சாட் மசாலாத்தூள், உப்பு, அரைத்த விழுது சேர்த்துப் பிசையவும்.

இந்த மசாலா கலவையைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி உருண்டைகளைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, மொறுமொறுவென பொரித்து எடுக்கவும். பொரித்த இந்த உருண்டைகளின் நடுவே லாலிபாப் குச்சியைக் குத்தி, தக்காளி சாஸ் அல்லது மயோனைஸுடன் பரிமாறவும்.

ஃபிஷ் ஸ்டஃப்டு பீட்ரூட் பான் கேக் சாண்ட்விச்

தேவையானவை:

பான் கேக் செய்ய:

மைதா மாவு – ஒரு கப்

பீட்ரூட் – ஒன்று

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

முட்டை – ஒன்று

உப்பு – கால் டீஸ்பூன்

பால் – கால் கப் (காய்ச்சி ஆற வைத்தது)

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

ஸ்டஃப்பிங் செய்ய:

மயோனைஸ் – அரை கப்

சூரை மீன் (டியூனா ஃபிஷ்) – அரை கப் (டின்களில் கிடைக்கும்)

ஃபிஷ் ஸ்டஃப்டு பீட்ரூட் பான் கேக் சாண்ட்விச்

செய்முறை:

பீட்ரூட்டை வேகவைத்து, தோல் நீக்கி விழுதாக அரைக்கவும். இதுவே பீட்ரூட் ப்யூரி. மயோனைஸுடன் சூரை மீன் சேர்த்துக் கலந்து தனியாக வைக்கவும். மைதா மாவுடன் பேகிங் பவுடர், உப்பு சேர்த்துக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பால், பீட்ரூட் ப்யூரி சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி, எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் மைதா கலவையைச் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.

சாண்ட்விச் டோஸ்டரில் முதலில் சிறிதளவு மைதா – பீட்ரூட் கலவையை ஊற்றவும். இதன் மேலே சிறிதளவு மயோனைஸ் கலவையை வைக்கவும். பிறகு, இதன்மீது மீண்டும் சிறிதளவு மைதா – பீட்ரூட் கலவையை ஊற்றி மூடி வேகவைத்து எடுக்கவும் (டூத் பிக்கால் குத்திப் பார்த்தால் ஒட்டாமல் வர வேண்டும். அதுதான் சரியான பதம்). இதை சாஸுடன் பரிமாறவும்.

வாழைக்காய் ஜாமூன் ட்ரஃபிள்

தேவையானவை:

சாக்லேட் – க்ரீம் பிஸ்கட் – ஒரு பாக்கெட்

விப்பிங் க்ரீம் – தேவையான அளவு

ஜாமூன் செய்ய:

வாழைக்காய் – ஒன்று

பால் பவுடர் – அரை கப்

மைதா மாவு – 4 டேபிள்ஸ்ஸ்பூன்

ரவை – ஒரு டேபிள்ஸ்ஸ்பூன்

நெய் – அரை டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

பாகு செய்ய:

சர்க்கரை – ஒரு கப்

தண்ணீர் – ஒரு கப்

ஏலக்காய் – 3 (நசுக்கவும்)

வாழைக்காய் ஜாமூன் ட்ரஃபிள்

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் ஏலக்காய் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கவும். இதுவே பாகு. வாழைக்காயை வேகவைத்து தோல் நீக்கி கட்டியில்லாமல் மசிக்கவும். இதனுடன் பால் பவுடர், மைதா, ரவை, நெய் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து தனியே வைக்கவும். உள்ளங்கையில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொண்டு பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பிறகு, இந்த உருண்டைகளைப் பாகில் போட்டு ஊறவைக்கவும். பிஸ்கட்டுகளை கொரகொரப்பான தூளாக நொறுக்கவும். கண்ணாடிக் குவளையில் பிஸ்கட் தூளை முதல் லேயராக பரப்பவும்.

இதன் மீது ஊறிய ஜாமூன் உருண்டைகளை இரண்டாக நறுக்கி சேர்க்கவும். பிறகு இதன் மீது விப்பிங் க்ரீமை பரவலாக ஊற்றவும். இறுதியாக மேலே ஒரு ஜாமூன் உருண்டையை வைத்து அலங்கரிக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து, குளிர்ந்த பிறகு பரிமாறவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.