புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி கடந்த நிதியாண்டில் முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. இது 2021-22 நிதியாண்டைவிட 12 சதவீதம் அதிகம்.
ராணுவ தளவாட இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட ராணுவ தளவாடங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ராணுவ தளவாட உற்பத்தியாளர்களுக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்த 2022-23 நிதியாண்டில் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி மதிப்பு ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 800 கோடியாக அதிகரித்துள்ளது. தனியார் ராணுவ தளவாட உற்பத்தியாளர்களிடமிருந்து புள்ளி விவரம் வர வேண்டி உள்ளது. அதன் பிறகு இந்த மதிப்பு மேலும் அதிகரிக்கும். குறிப்பாக உள்நாட்டு உற்பத்தி முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இது 2021-22 நிதியாண்டின் ரூ.95 ஆயிரம் கோடியை விட 12 சதவீதம் அதிகம்.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்கள் ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட ஏதுவாக கொள்கைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை அரசு செய்துள்ளது. அந்த வகையில் கடந்த 8 ஆண்டுகளில் ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபடுவதற்காக வழங்கப்பட்ட உரிமங்கள் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்துள்ளது” என்றார்.
இதுபோல கடந்த 2022-23 நிதியாண்டில் நாட்டின் ஆயுத மற்றும் ராணுவ தளவாட தொழில்நுட்ப ஏற்றுமதி முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ.15,920 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2016-17 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 10 மடங்கு அதிகம்.
வரும் 2024-25 நிதியாண்டுக்குள் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தியை ரூ.1.75 லட்சம் கோடியாக அதிகரிக்கவும் ஏற்றுமதியை ரூ.35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், உலக அளவில் ஆயுத இறக்குமதியில் முன்னிலை வகிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 2018 முதல் 2022 வரையிலான காலத்தில் சர்வதேச ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 11 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.