விசாகப்பட்டினம்: ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் அறிவிப்பை நான் வரவேற்கிறேன் என தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 3 நாட்களாக விசாகப்பட்டினத்தில் ஆந்திர அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். இதில் நிறைவு நாளான வெள்ளிக்கிழமையன்று இரவு அவர் அனகாபல்லியில் மாபெரும் கூட்டத்தில் திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி பேசினார்.
அப்போது மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: ரிசர்வ் வங்கி அறிவிப்பை நான் பெரிதும் வரவேற்கிறேன். ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவு மிக சிறப்பானது. நான் சில ஆண்டுகளுக்கு முன்பே, டிஜிட்டல் கரன்ஸியை அமல்படுத்த வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கியை கோரி இருந்தேன்.
ரூ.1,000, ரூ.2,000 போன்ற பெரிய நோட்டுகளால் ஊழல் அதிகரிக்கும். தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் பொதுமக்களுக்கு நன்கொடை வழங்குவதும் இந்த பெரிய நோட்டுகளால்தான். ஆகவே இதனை ஒழிக்க வேண்டுமென குரல் கொடுத்திருந்தேன். தற்போது ரூ.2 ஆயிரம் நோட்டை ரிசர்வ் வங்கி ரத்து செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நான் ஆட்சிக்கு வந்ததும் விசாகப்பட்டினத்தை ஒரு சுற்றுலா தலமாகவும், தகவல் தொழில்நுட்ப மையமாகவும், மாநிலத்தின் பொருளாதார மையமாகவும் மாற்றி காட்டுவேன். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.