ரூ.2,000 நோட்டு திரும்பப் பெறும் அறிவிப்பு – மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி: புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்: ரூ.2,000 நோட்டுகள் பரிமாற்றத்துக்கான சரியான தொகை அல்ல. என்று 2016-ம் ஆண்டு நவம்பர் மாதமே கூறினோம். தற்போது நாங்கள் சொன்னது சரி என்று நிரூபித்துள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு, அரசும், ரிசர்வ் வங்கியும் மீண்டும் ரூ.500 மற்றும் ரூ.1,000 அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ரூ.1,000 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த அழுத்தம் உள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்: ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுதல் என்பது கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்: முதலில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொண்டு வரும்போது இது ஊழலை தடுக்கும் என்று கூறி வந்தனர். இந்நிலையில் தற்போது ரூ.2 ஆயிரம் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதன் மூலம் ஊழல் முடிவுக்கு வரும் என்கின்றனர். இதனால்தான் நான் சொல்கிறேன். பிரதமருக்கு இதுகுறித்த கல்வியறிவை போதிக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி: இது 2016-ல் நடந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை போலவே உள்ளது. அந்த நடவடிக்கை முழுக்க முழுக்க தோல்வியடைந்தது. அந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பறிபோனது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதை மக்கள் மறக்கமாட்டார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பினாய் விஸ்வம்: நாட்டின் பொருளாதாரத் துறையை துக்ளக் போன்றவர்கள் நிர்வகித்தால் இந்த நிலைதான் ஏற்படும்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி: 2015-ல் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தனர். ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொண்டு வருவதால் கருப்புப் பணம் ஒழிக்கப்படும் என்றனர். 7 ஆண்டுகள் கழித்து தற்போது அதையும் திரும்பப் பெறுகின்றனர். இதுவும் பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கையா?

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்: 2-வது பணமதிப்பிழப்பு பேரழிவின் தொடக்கம். பைத்தியக்காரத்தனமான முடிவு.

காங். செய்தித்தொடர்பாளர் பவன் கேரா: 2016 நவம்பர் 8-ம் தேதி வெளியான பேய் மீண்டும் நாட்டுக்குள் நுழைந்து பயமுறுத்தத் தொடங்கியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.