திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு அடுத்த தும்பிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொல்லாபுரி. இவரது மனைவி விமலா. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் புவனேஸ்வரி (16). இவர், திருத்தணி அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நடந்த முடிந்த 11-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
இதில் புவனேஸ்வரி இரண்டு பாடப்பிரிவில் தேர்ச்சி பெறாததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவிக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறினார்கள். ஆனாலும் மாணவி சமாதானம் அடையவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர்கள் நீண்ட நேரம் ஆகியும் அவரது மகள் புவனேஸ்வரி வீட்டின் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது தூக்கில் தூங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று புவனேஸ்வரி உடலை கீழே இறக்கினார்கள். இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமலேயே மாணவியின் உடலை எரித்து உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவி உயிரிழந்தது கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.