நடப்பு ஐ.பி.எல் சீசனின் லீக் சுற்றின் இறுதிநாளில் இருக்கிறோம். ப்ளேஆஃப்ஸூக்குத் தகுதிப்பெறப்போகும் அந்த நான்காவது அணி எது என்கிற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை.
ராஜஸ்தான், மும்பை, பெங்களூர் என மூன்று அணிகள் இந்த ஒற்றை ஸ்பாட்டுக்காக மோதிக்கொண்டிருந்தன. மும்பை இந்தியனஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் மும்பை அணி வென்றுவிட்டதால் 14 புள்ளிகளை மட்டுமே வைத்துக் கொண்டு காத்திருந்த ராஜஸ்தான் அணி, ப்ளேஆஃப்ஸ் ரேஸிலிருந்து வெளியேறிவிட்டது.
மும்பை vs சன்ரைசர்ஸ் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்து 200 ரன்களை எடுத்திருந்தது. ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த விவ்ராண்ட் சர்மாவும் மயங்க் அகர்வாலும் சிறப்பாக ஆடியிருந்தனர். இருவரும் இணைந்து கூட்டணியாக 140 ரன்களை எடுத்திருந்தனர். இவர்களின் ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. மும்பைக்கு டார்கெட் 201. மும்பை அணி 200+ சேஸ் என்றாலே இந்த சீசனில் கொஞ்சம் கூடுதல் உத்வேகத்துடனும் கூடுதல் எனர்ஜியுடனும் இறங்கி அசத்தி வருகிறது.
அந்த வகையில் இந்தப் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதமடிக்க கேமரூன் க்ரீன் சதமடிக்க 18 ஓவர்களிலேயே மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.
இப்போது போட்டி மும்பைக்கும் பெங்களூருவுக்கும்தான். பெங்களூர் அணி தனது கடைசி லீக் போட்டியில் தற்போது குஜராத்தை எதிர்த்து ஆடிவருகிறது. ஆனால், இங்கேயும் ஒரு ட்விஸ்ட் என்பதாக சின்னசாமி மைதானத்தில் மழை கொட்டி தீர்ப்பதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதமானது.
மீண்டும் மழை குறுக்கிடாமல் குஜராத்துக்கு எதிரான இந்தப் போட்டியை பெங்களூர் வெல்லும்பட்சத்தில் சந்தேகமே இன்றி பெங்களூர் அணி ப்ளேஆஃப்ஸ் சுற்றுக்குத் தகுதிப்பெற்றுவிடும்.
மும்பையும் பெங்களூருவும் 16 புள்ளிகள் என ஒரே நிலையில் இருந்தாலும் மும்பையின் ரன்ரேட் இப்போதும் -0.044 தான். ஆனால், பெங்களூர் அணியின் ரன்ரேட் +0.180 ஆக பாசிட்டிவ்வில் இருக்கிறது.
ஆக, வென்றால் பெங்களூருவுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஒருவேளை பெங்களூர் அணி தோற்றாலோ அல்லது மழையால் போட்டி தடைபட்டு இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கொடுக்கப்படும் நிலை ஏற்பட்டாலோ பெங்களூர் அணி முறையே 14 அல்லது 15 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கும். அப்போது 16 புள்ளிகளை வைத்திருக்கும் மும்பை அணி எந்த சிரமமுமின்றி ப்ளேஆஃப்ஸூக்குத் தகுதிப்பெற்றுவிடும்.
மூன்றாவது இடத்தில் லக்னோ இருக்கிறது. எலிமினேட்டரில் லக்னோவுடன் மும்பை அணி ஆடப்போகிறதா இல்லை பெங்களூர் அணி ஆடப்போகிறதா என்பது இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
இரண்டு அணிகளில் 4வது இடம் எந்த அணிக்குக் கிடைக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கமென்ட்டில் சொல்லுங்கள்.