திருவனந்தபுரம்: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மோகன்லால் தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
இளம் ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் இன்றும் பிஸியான நடிகராக வலம் வருகிறார் மோகன்லால்.
இந்நிலையில், ஆரம்ப காலத்தில் ஆடிஷன் சென்ற மோகன் லாலுக்கு 5 மார்க் போட்ட இயக்குநருக்கு அவர் கொடுத்த பதிலடி தற்போது தெரியவந்துள்ளது.
இயக்குநருக்கு பதில்டி கொடுத்த மோகன்லால்
இருவர், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, கப்பான் போன்ற படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் மோகன்லால். மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால், தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 350 படங்களுக்கும் மேல் நடித்துள்ள மோகன்லால் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
மோகன்லாலின் ஆரம்பகால திரை பயணத்தில் ஆடிஷன் சென்ற அவருக்கு 5 மார்க் போட்டுள்ளார் பிரபல இயக்குநர் சிபி மலையில். பின்னாளில் அவரது இயக்கத்தில் நடித்து தேசிய விருது வென்று பதிலடி கொடுத்தார் மோகன்லால். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மோகன் லாலும் அவரது நண்பர்களும் திரையுலகில் அடியெடுத்து வைக்க வேண்டும் என அதற்கான முயற்சிகளில் இறங்கினர்.
அவர்கள் விரும்பியபடி தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்பதால், நண்பர்களாக இணைந்து ஒரு படம் எடுக்க முடிவெடுக்கின்றனர். அதன்படி 1978ம் ஆண்டில் ‘திறனோட்டம்’ என்ற படத்தை தொடங்க, அதில் சந்திரமோகன் என்பவர் ஹீரோவாகவும், ரேணு சந்திரா நாயகியாகவும் நடித்தனர். இந்தப் படத்தில் மோகன்லால் ஒரு புத்தி சுவாதீனமில்லாத வேலைக்காரன் ரோலில் நடித்திருந்தார். அப்போது அவருக்கு 18 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், திறனோட்டம் படத்தை மோகன்லால் நண்பர் அசோக்குமார் என்பவர் இயக்க, தற்போதைய முன்னணி இயக்குநர் ப்ரியதர்ஷன் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தார். நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பாவான சுரேஷ்குமார் க்ளாப் அடித்து வைக்க, மணியன்பிள்ளை ராஜு, ரவிக்குமாரும் ஆகியோரும் சிறு பாத்திரத்தில் நடித்திருந்தனர். கருப்பு வெள்ளையில் உருவான இந்தப் படம் வெளியாகாமல் அப்படியே முடங்கியது. அதன்பின்னர் 2005ம் ஆண்டு ஒரேயொரு தியேட்டரில் மட்டும் ரிலீசானது.
திறனோட்டம் படம் முடிந்ததும் தமிழில் ஒரு படம் எடுக்கத் தொடங்கினார்கள் மோகனால் அண்ட் டீம். இதற்காக பாடல் பதிவும் செய்யப்பட்ட நிலையில், திறனோட்டம் படத்தின் போஸ்டர் விளம்பரத்தை பார்த்து ஒன்னொரு படத்தின் ஆடிஷனுக்காக அழைப்புச் சென்றுள்ளது. கிடைத்த வாய்ப்பை விட வேண்டாம் என ஆடிஷன் போன மோகன்லாலுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.
இந்த ஆடிஷனில் இயக்குநர் பாஸில், தயாரிப்பாளர்களான ஜோஸ், ஜிஜோ, அவரது நண்பர்கள் அமன், சிபி மலையில் ஆகியோர் முன்பு நடித்துக் காட்டியுள்ளார் மோகன்லால். அவரது நடிப்பைப் பார்த்த பாஸில் 90 மதிப்பெண்களும், ஜிஜோ 95 மதிப்பெண்களும் கொடுத்துள்ளனர். ஆனால், அமன், ஜோஸ் ஆகியோர் பத்துக்கும் கீழே மதிப்பெண் கொடுக்க, சிபி மலையில் 5 மதிப்பெண் மட்டுமே போட்டுள்ளார். ஆனாலும் மோகன்லால் அந்தப் படத்தில் நடித்துள்ளார்.
‘மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள்’ என்ற டைட்டிலில் உருவான அந்தப் படத்தில் ‘ஒரு தலை ராகம்’ சங்கர் நாயகனாகவும், பூர்ணிமா ஜெயராம் என்ற புதுமுகம் நாயகியாகவும் நடித்தனர். கொடைக்கானலில் ஒரு ஹோட்டலில் நடந்த ஷூட்டிங்கில் “குட் ஈவ்னிங் மிஸஸ் பிரபா நரேந்திரன்” என்கிற தன் முதல் வசனத்தைப் பேசினார் மோகன்லால். 1980ம் ஆண்டு ரிலீஸான இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
அங்கிருந்து தொடங்கிய மோகன்லாலின் திரை பயணம் அடுத்தடுத்து உச்சம் தொட்டது. அதேநேரம், ஆடிஷனில் வெறும் 5 மதிப்பெண் மட்டுமே கொடுத்த சிபி மலையில் இயக்கிய படத்தில் ஹீரோவாக நடித்து தேசிய விருது வென்றார் மோகன்லால். ஆடிஷனில் 5 மார்க் போட்ட சிபி மலையிலுக்கு இது சரியான பதிலடியாக அமைந்தது. சிபி மலையில் இயக்கிய கிரீடம், பரதம் ஆகிய படங்களுக்கு தான் மோகன்லால் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.