புதுடில்லி:புழக்கத்தில் உள்ள, 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுள்ள நிலையில், ‘மக்கள் எவ்வித ஆவணங்களையும் சமர்ப்பிக்காமலேயே வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்’ என, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ தெரிவித்துள்ளது.
கடந்த 2016, நவ., 8ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன.
இந்த அறிவிப்பு வெளியான நொடியில் இருந்து, அப்போது புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் சட்டப்படி செல்லாததாக அறிவிக்கப்பட்டன.
படிப்படியாக
இதை தொடர்ந்து, புதிய 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் உள்ள இந்த புதிய, 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம், சந்தையில் படிப்படியாக குறைய துவங்யது.
உயர் மதிப்புடைய இந்த ரூபாய் நோட்டுக்கள், கறுப்புப் பணமாக பல இடங்களில் குவிக்கப்பட்டு வருவது அரசுக்கு கவலை அளித்தது. இதை தொடர்ந்து, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை 2018 – 19ல் ரிசர்வ் வங்கி நிறுத்தியது.
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 19ம் தேதி அதிரடியாக அறிவித்தது. ஆனால், செப்., 30 வரை இந்த ரூபாய் நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் என, அந்த அறிவிப்பில் தெரிவித்தது.
மக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் 2000 ரூபாய் நோட்டுகளை, நாளை முதல் செப்., 30 வரை தங்கள் வங்கி கணக்குகளில், ‘டிபாசிட்’ செய்து கொள்ளவும், வங்கிகளில் ஒருமுறைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து மாற்றிக் கொள்ளவும் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் இந்த நடைமுறை குறித்து சில முக்கிய அறிவிப்புகளை, எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:
வங்கிகளில், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வரும் வாடிக்கையாளர், அடையாள சான்று, முகவரி சான்று, வருமான வரி கணக்கு அட்டை போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எவ்வித ஆவணங்களும் இன்றி ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
அதே போல, தங்கள் வங்கி கணக்குகளில் 2000 ரூபாய் நோட்டுகளை டிபாசிட் செய்வதற்கான வரம்பை ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கவில்லை. அதே நேரம், டிபாசிட் செய்வதற்கான வழக்கமான வரம்பு உள்ளிட்ட விதிகள் பின்பற்றப்படும்.
முழு விபரம்
மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும்போது, அவர்களுக்கு தேவையான வசதிகளும், ஒத்துழைப்பும் அளிக்கப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை எஸ்.பி.ஐ.,யின் உள்ளூர் தலைமை அலுவலகங்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதே போல, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற வரும் வாடிக்கையாளர், எத்தனை முறை வேண்டுமானாலும் வரிசையில் நின்று, ஒருமுறைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
நடைமுறைக்கு வரும்போது தான், இது பற்றிய விபரங்கள் முழுமையாக தெரிய வரும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.
சட்ட விரோதமாக பணம் சம்பாதித்து, அதை மூட்டை மூட்டையாக சேர்த்து வைத்துஉள்ளவர்கள் தான், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்ட நடவடிக்கையை கண்டு கண்ணீர் விடுகின்றனர்.
அனில் விஜ்ஹரியானா உள்துறை அமைச்சர், பா.ஜ.,
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்