வென்றே ஆக வேண்டிய கடைசி லீக் போட்டியில் டெல்லியை வீழ்த்தி சென்னை அணி ப்ளேஆஃப்ஸ் சுற்றுக்குத் தகுதிப்பெற்றிருக்கிறது. 23-ம் தேதி குஜராத்துக்கு எதிராக முதல் தகுதிச்சுற்றிலும் சென்னை ஆடவிருக்கிறது.
சென்னை அணி இதுவரை ஆடிய 14 சீசன்களில் 12 சீசன்களில் ப்ளேஆஃப்ஸ் சுற்றுக்குத் தகுதிப்பெற்றிருக்கிறது. சென்னை அணியின் இந்த வெற்றிகரமான பயணத்திற்கு அதன் ஓப்பனர்கள் மிக முக்கிய காரணமாக இருந்திருக்கின்றனர்.
இந்த சீசனில் கான்வே ருத்துராஜூம் எந்தளவுக்கு முக்கியமான பங்களிப்புகளை அளித்திருக்கிறார்கள், அவர்கள் சென்னை அணிக்கு எந்தளவுக்கு முக்கியம் என்பதையெல்லாம் சிஎஸ்கேவின் ஓப்பனிங் பாரம்பரியத்தின் வழி நின்று பேசினால் எளிதில் புரிந்துவிடும் என நினைக்கிறேன். சென்னை அணி ஐ.பி.எல் இன் தொடக்கத்திலிருந்தே ஓப்பனிங் கூட்டணியில் ஒரு இந்திய பேட்டர் ஒரு வெளிநாட்டு பேட்டர் அல்லது இரண்டு வெளிநாட்டு பேட்டர் என்பதைத் தொடர்ச்சியாகப் பின்பற்றி வருகிறது. மேத்யூ ஹேடன், ஹஸ்ஸி, ஸ்மித், மெக்கல்லம், வாட்சன், டூப்ளெஸ்ஸி என அத்தனை பேரும் சென்னை அணிக்காக அந்த ஓப்பனிங் ஸ்லாட்டில் தடம் பதித்தவர்கள். அந்த வகையில் அந்த பாரம்பரியத்தில்தான் டெவான் கான்வேவும் ருத்துராஜ் கெய்க்வாட்டும் இந்த முறை கூட்டணி சேர்ந்தனர். இந்த முறையும் சென்னை அணியின் ஃபார்முலா நல்ல ரிசல்ட்டையே கொடுத்திருக்கிறது.
டெல்லிக்கு எதிராக வென்றே ஆக வேண்டிய போட்டியில் இருவரும் 15வது ஓவர் வரை நின்று 141 ரன்களை அடித்திருந்தனர். அணியின் ஸ்கோர் 220+ ஆக உயர்ந்ததற்கு அவர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளமே காரணமாக இருந்தது. இந்தப் போட்டி என்றில்லை. இந்த சீசன் முழுவதுமே நல்ல பங்களிப்பையே இருவரும் கொடுத்திருக்கின்றனர்.
ஆடியிருக்கும் 14 லீக் போட்டிகளில் இருவரும் இணைந்து மட்டும் 698 ரன்களை அடித்திருக்கின்றனர். இரண்டு போட்டிகளில் 100+ பார்ட்னர்ஷிப்பை அமைத்திருக்கின்றனர். ஒன்று டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டி. இன்னொன்று சீசன் தொடக்கத்தில் லக்னோவிற்கு எதிரான போட்டி. இதுபோக மூன்று போட்டிகளில் 50+ பார்ட்னர்ஷிப்பை அமைத்திருக்கின்றனர்.
நடப்பு சீசனின் சிறந்த ஓப்பனிங் இணை என டூப்ளெஸ்ஸி – கோலி இணையே பெயர் பெற்றிருக்கிறது. அவர்கள் இருவரும் இணைந்து கூட்டணியாக இந்த சீசனில் 872 ரன்களை அடித்திருக்கின்றனர். இவர்களுக்கு அடுத்தப்படியாக இந்த சீசனின் சிறந்த ஓப்பனிங் இணையாக ருத்துராஜூம் கான்வேயுமே இருக்கிறார்கள்.
இந்த சீசனைக் கடந்து சிஎஸ்கே கடைசியாகக் கோப்பையை வென்ற சீசனோடு ஒப்பிட்டுப் பார்த்தாலுமே கான்வே + ருத்துராஜ் கூட்டணி சிறப்பான கூட்டணி என்கிற மதிப்பீட்டையே பெறுகிறது. கடைசியாக சிஎஸ்கே 2021 சீசனில் சாம்பியனாகியிருந்தது. 2020 சீசனில் அத்தனை மோசமாக ஆடிவிட்டு 2021 சீசனில் சிஎஸ்கே சிறப்பாக ஆடியதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது அதன் திடமான ஓப்பனிங் இணையே! ஏனெனில், 2020 சீசனில் சிஎஸ்கேவுக்கு சரியான ஓப்பனிங் இணைய செட் ஆகவில்லை. ஃபாப் மட்டுமே அடித்துக் கொண்டிருந்தார். இன்னொரு முனையில் யாருமே செட் ஆகவில்லை. சாம் கரனையெல்லாம் ஓப்பனிங் இறக்கியிருந்தார் தோனி.
ஓப்பனிங்கில் மொமண்டமே கிடைக்கவில்லை என ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் தோனியே புலம்பிக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட நிலையிலிருந்து 2021 சீசனில் சென்னை அணி ஒரு திடமான ஓப்பனிங் கூட்டணியுடன் மீண்டு வந்தது. ருத்துராஜூம் ஃபாபும் சிஎஸ்கேவும் தோனியும் எதிர்பார்த்த மொமண்டமைக் கொடுத்தனர். இருவருமே ஆரஞ்சு கேப் ரேஸில் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறினர். இருவருமே 600+ ரன்களை எடுத்திருந்தனர். இருவரும் இணைந்து கூட்டணியாக 756 ரன்களை எடுத்திருந்தனர்.
ருத்துராஜ் 635 ரன்களையும் டூ ப்ளெஸ்சிஸ் 633 ரன்களையும் எடுத்திருந்தார். இந்த வகையில் பார்த்தால் இருவரும் அணிக்காக 1268 ரன்களை எடுத்திருந்தனர்.
ருத்துராஜ் + டூப்ளெஸ்ஸி கூட்டணி கணக்கோடு ருத்துராஜ் + கான்வே கூட்டணி கணக்கை ஒப்பிட்டுப் பார்ப்போம். ருத்துராஜ் + டூப்ளெஸ்சிஸ் இணையாக 756 ரன்களை எடுத்திருக்கிறார்கள். ப்ளே ஆஃப்ஸ் எல்லாம் மீதமிருக்கும் நிலையிலேயே இப்போதே ருத்துராஜ் + கான்வே கூட்டணி 698 ரன்களை எடுத்திருக்கிறது. அணிக்கு அவர்களின் பங்களிப்பு என்கிற ரீதியில் பார்த்தாலும் ருத்துராஜ் + ஃபாப் இருவரும் கூட்டாக 1268 ரன்களை எடுத்திருக்கின்றனர். ருத்துராஜ் + கான்வே கூட்டணி 1089 ரன்களை எடுத்திருக்கின்றனர்.
ஓப்பனிங் அல்லாமல் ஒட்டுமொத்தமாக பார்ட்னர்ஷிப் ரெக்கார்டுகளை புரட்டினோம் எனில் கோலியும் ஏபிடியும் ஒரே சீசனில் 939 ரன்களை எடுத்திருக்கின்றனர். அதற்கு அடுத்த நிலையில் இந்த சீசனில் கோலி + டூப்ளெஸ்ஸி கூட்டணி 872 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இவர்களுக்கு அடுத்து வார்னர் – பேர்ஸ்ட்டோ இணை 791 ரன்களை எடுத்து மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக அந்த ருத்துராஜ் + ஃபாப் சாம்பியன் கூட்டணி. அதற்கடுத்த இடத்தில் இந்த சீசனின் ருத்துராஜ் – கான்வே கூட்டணியே இருக்கும். சிஎஸ்கே இன்னும் இந்த சீசனில் அதிகபட்சமாக 3 போட்டிகளை ஆட முடியும். இவற்றில் இந்தக் கூட்டணி இன்னும் பல ரெக்கார்டுகளை முறியடிக்கக்கூடும்.
இவ்வாறாக இருவருக்குமிடையே ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து விட்டுக்கொடுத்து அணியின் நலனை முன்னிறுத்தி ஆடுகின்றனர். இதுதான் சிஎஸ்கேவின் பாரம்பரியம். இதுதான் சிஎஸ்கேவின் சக்சஸ் ஃபார்முலா!