மும்பையின் உயிர் நாடியாகக் கருதப்படுவது புறநகர் ரயில் இணைப்பு. இந்த புறநகர் ரயில் சேவை இல்லையென்றால் மும்பை மக்களின் வாழ்க்கை ஸ்தம்பித்துவிடும். அந்த அளவுக்குப் புறநகர் ரயில் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போய் இருக்கிறது.
ஆனால், இந்த ரயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏறி இறங்குவது என்பதே ஒரு சவாலான காரியமாகும். அப்படிப்பட்ட புறநகர் ரயிலில் தினமும் தெரு நாய் ஒன்று பயணம் செய்து வருகிறது. அந்த நாய் போரிவலியில் இருந்து அந்தேரி செல்லும் ரயிலில் தினமும் பயணம் செய்வதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர். சர்வசாதாரணமாக ரயில் வந்து நின்றதும் அந்த நாய் ஏறிக்கொள்கிறது. கதவோரம் படுத்துக்கொண்டு அடிக்கடி நமது ஊர் வந்துவிட்டதா என்று வெளியில் பார்த்துக்கொள்கிறது.
ரயிலில் ஏறும் பயணிகள் அல்லது உடன் பயணிக்கும் பயணிகளை அந்த நாய் எந்தத் தொந்தரவும் செய்வதில்லை. ரயிலில் ஏறியவுடன் படுத்துக்கொள்கிறது. ரயிலில் ஏறும் ஒவ்வொருவரும் அதை ஆச்சரியத்துடனே பார்த்துவிட்டு ஏறி உள்ளே செல்கின்றனர். சரியாக அந்தேரி ரயில் நிலையம் வந்தவுடன் குதித்து இறங்கி ஓடிவிடுகிறது.
அதிகமான பயணிகள் தெரு நாய் தினமும் ரயிலில் பயணம் செய்வதைப் பார்த்திருக்கின்றனர். அதில் ஒரு பயணி மட்டும் நாயின் பயணத்தை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதனை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். வீடியோ பார்த்த அதிகமானோர் தங்களது கருத்துகளையும் தெரிவித்துள்ளனர்.
“இது அதன் (நாய்) உலகம். நாம் அதன் ஒரு பகுதி” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவர், “எந்த நேரத்தில் அது பயணம் செய்கிறது என்பதைச் சொல்லுங்கள். நான் அவனைச் சந்திக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “சுதந்திரமான அமைதியான இலவச பயணத்தைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “போரிவலியில் இருந்து அந்தேரிக்கு பாஸ்ட் ரயிலில் போகும்படி யாராவது அதற்குச் சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது இடம் வந்தவுடன் உடனே அந்த நாய் இறங்கிச் சென்றுவிடுவதை அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்துச் செல்கின்றனர்.