நடிகர்கள்: சாய் தரம் தேஜ், சம்யுக்தா மேனன்இசை: அஜனீஷ் லோக்நாத்இயக்கம்: கார்த்திக் வர்மாஓடிடி: நெட்பிளிக்ஸ்
ஹைதராபாத்: கடந்த ஏப்ரல் 21ம் தேதி தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற விருபாக்ஷா திரைப்படம் இந்த மாதம் தமிழிலும் தியேட்டர்களில் வெளியானது.
தெலுங்கில் படம் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில், மே 21ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது விருபாக்ஷா.
பேய் படமான இந்த படத்தில் சாய் தரம் தேஜ், வாத்தி படத்தில் ஹீரோயினாக நடித்த சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விருபாக்ஷா திரைப்படம் அப்படி தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடிக்க என்ன காரணம் என்பது குறித்து இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
விருபாக்ஷா கதை: படத்தின் ஆரம்பக் காட்சியில் ருத்ரவனம் கிராமத்தில் சிறுமியின் பிணத்தை வைத்து தனது மனைவியின் உடம்பை சரி செய்வதற்காக மாந்திரீகம் செய்யும் ஒரு நபர் பற்றி அறிந்த ஊர் மக்கள் அந்த இடத்திற்கு வந்து அந்த நபரையும் அவரது மனைவியையும் ஒரு மரத்தில் வைத்து உயிருடன் எரித்து விடுகின்றனர். இன்னும் 12 வருஷத்தில் இந்த ஊரே அழிந்து நாசமாகிவிடும் என எரிந்து கொண்டே அந்த பெண் சாபமிடுகிறாள்.
அம்மா அப்பா எரிந்து சாம்பலாவதை பார்த்து அழும் சிறுவன் அதன் பின்னர் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்து விடுகின்றனர். அவன் அகோரியாக மாறி ஊரையே காலி செய்ய ஏகப்பட்ட வேலைகளை செய்து வருகிறான். இதற்கு இடையே அந்த ஊருக்கு பல ஆண்டுகள் கழித்து வரும் ஹீரோ அந்த ஊரில் இருக்கும் ஹீரோயின் சம்யுக்தா மீது காதலில் விழுகிறார்.
ஊரில் அடுத்தடுத்த மர்ம மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், அடுத்ததாக அப்படி மரணிக்கப்போவது சம்யுக்தா தான் என்பது தெரிய வருகிறது. காதலியை காப்பாற்ற ஒட்டுமொத்த ஊரையே எதிர்க்கிறார் ஹீரோ கடைசியில் ஹீரோயினை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் கதை.
படம் எப்படி இருக்கு?: ஹாரர் படமாக விருபாக்ஷா படத்தை கார்த்திக் வர்மா இயக்கி உள்ளார். ஹீரோவாக சாய் தரம் தேஜ் ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக நடித்துள்ளார். வாத்தி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த சம்யுக்தா மேனன் இந்த படத்தில் அழகு பொங்க வருகிறார். கடைசியில் அவரை கொன்றால் தான் ஊரை காப்பாற்ற முடியும் என ஊர் மக்கள் முடிவெடுக்க, 8 மணி நேரத்திற்குள் ஊரை காப்பாற்றும் தீர்வுடன் வருகிறேன் என சொல்லி விட்டு நாயகன் அகோரி ஒருவரின் உதவியுடன் அந்த சீர்த்திருத்த பள்ளியில் சேர்ந்து பின்னர் அகோரியாக மாறிய அந்த நபரை தேடிச் செல்கிறான் ஹீரோ.
ஆனால், அங்கே அவன் தன்னைத் தானே சமாதியாக்கிக் கொண்டு விட்டான் என்பதை தெரிந்ததும் ஷாக் ஆகி விடுகின்றான் ஹீரோ. கடைசியில் யார் மூலமாக அந்த ஊர் மக்களை கொல்ல அந்த அகோரியான மகன் செயல்பட்டு வருகிறான் என்பதை ஹீரோ கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் விருபாக்ஷா படத்தின் மிரட்டலான கதை.
பிளஸ்: இயக்குநர் கார்த்திக் வர்மாவின் எழுத்து மற்றும் இயக்கம் படத்திற்கு பெரிய பிளஸ். இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் பிஜிஎம் கடைசி வரை அருந்ததி படத்தின் வைப்ரேஷனை கொடுத்து மிரட்டுகிறார். சாய் தரம் தேஜ், சம்யுக்தா, சுனில், சாமியாராக நடித்துள்ள நபரின் நடிப்பு என அனைவரது ஆக்டிங்கும் படத்திற்கு பலமாக மாறி உள்ளது.
எப்படியாவது ஹீரோயினை காப்பாற்ற போராடும் ஹீரோ கடைசியில் அவன் கையாலே ஹீரோயினை கொல்லும் காட்சி தான் இந்த படத்தையே ஹிட் படமாக மாற்றியது என சொல்லலாம். 2ம் பாகத்திற்கான லீடு வைத்திருப்பதும் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக மாறி உள்ளது.
மைனஸ்: ஹீரோ ஹீரோயினுக்கான ரொமான்ஸ் காட்சிகள் இப்படியொரு திகிலான படத்தில் அந்தளவுக்கு ஓட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதே போல கிளைமேக்ஸிலும் அந்த காதல் எமோஷனை வைத்தே படத்தை முடித்துள்ளது. கடைசியில் வைக்கப்பட்ட அந்த ட்விஸ்ட் என்பவை கன்வின்ஸிங்காக இல்லை.
அந்நியன், அருந்ததி உள்ளிட்ட பல படங்களை பார்த்த எஃபெக்ட்டும் ஹீரோவுக்கு மட்டும் ஒண்ணுமே ஆக மாட்டுதே ஏன் என்கிற கேள்வியும் அதற்கு கொடுக்கும் டாலர் விளக்கமும் பெரிதாக கனெக்ட் ஆகவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் பேய் படம் என்கிற பயமே போய் விடுவது இந்த படத்திற்கான மிகப்பெரிய மைனஸ் ஆக மாறிவிடுகிறது.
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ள இந்த படம் தெலுங்கில் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் டப்பிங் விரைவில் இணைக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.