You Are Causing Me A Real Problem…: Biden To PM On Upcoming US Trip | அமெரிக்காவில் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க ஏராளமானோர் ஆர்வம்!: ஜோ பைடன் பெருமிதம்

ஹிரோஷிமா: அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி கேட்டு, தங்களுக்கு ஏராளமான விண்ணப்பங்கள் வந்து கொண்டுள்ளன. இதனால், என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் செவ்வாய்க்கிழமை சிட்னி செல்லும் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய தொழிலதிபர்களை சந்தித்து பேசுகிறார். பிறகு அந்த நாட்டில் வசிக்கும் இந்தியர்களுடன் கலந்துரையாடுகிறார். இதன் பிறகு வரும் ஜூன் மாதம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு செல்லும் மோடி, வெள்ளை மாளிகையில் நடக்கும் விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 மாநாட்டிற்கு இடையே, குவாட் அமைப்பின் மாநாடு நடந்தது. இதில், நரேந்திர மோடி, ஜோ பைடன், அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, மோடியிடம் ஆஸி., பிரதமர் மற்றும் அமெரிக்க அதிபர் சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறும்போது, சிட்னியில் இந்திய வம்சாவளியினர் சந்திப்பு நகழ்ச்சியில் பங்கேற்க டிக்கெட் கேட்டு ஏராளமான அழைப்புகள் எனக்கு வருகிறது. 20 ஆயிரம் பேர் அமரக்கூடிய அந்த மைதானத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டது. ஆனாலும் இன்னும் டிக்கெட் கேட்டு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது எனக்கூறிய அல்பானீஸ், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 90 ஆயிரம் பேர் அமரக்கூடிய நரேந்திர மோடி மைதானத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பையும் நினைவு கூர்ந்தார்.

இதன் பிறகு, மோடியிடம் தனக்கும் இதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய ஜோ பைடன், நான் உங்களிடம் ஆட்டோ கிராப் வாங்க வேண்டும். வாஷிங்டன்னில் அடுத்த மாதம் உங்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அமெரிக்காவில் இருந்து ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புகின்றனர். நான் நகைச்சுவை செய்கிறேன் என நினைத்தால், என்னுடைய குழுவினரை கேட்டுப்பாருங்கள். நீங்கள் மிகவும் பிரபலமாகிவிட்டீர்கள்.

குவாட்டில் நாம் ஆற்றும் பணி உள்ளிட்ட அனைத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் எனக்கூறியுள்ளார்.

திருக்குறள் புத்தகம் வெளியீடு

பிரதமர் மோடி தனது வெளிநாட்டு பயணத்தில் இந்திய கலாசாரத்தை பரப்புவதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வருகிறார். ஜப்பானில், மஹாத்மா காந்தி சிலையை திறந்து வைத்த மோடி, பப்புவா நியூ கினியாவில், அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தையும் வெளியிட உள்ளார்.

கவனம் ஈர்த்த மோடியின் ஆடை

latest tamil news

இதனிடையே, ஹிரோஷிமா நகரில் ஜி7 மாநாட்டில் இன்றைய(மே 21) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி , மறுசுழற்சி பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார். அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.