சிவகங்கை: அனைத்து அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும் என சிவகங்கை மாவட்ட புதிய ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட புதிய ஆட்சியராக ஆஷா அஜித் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் கடந்த 2015-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்று 2016-17-ம் ஆண்டு திண்டுக்கல் உதவி ஆட்சியாகவும் (பயிற்சி), 2017-19-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சார்-ஆட்சியராகவும், 2019-ம் ஆண்டு சென்னை தலைமை செயலகத்தில் துணை செயலராகவும், 2022-ம் ஆண்டு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகவும் பணிபுரிந்தார்.
தொடர்ந்து சென்னை தொழில் வழிகாட்டி நிறுவன செயல் இயக்குநராகவும் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று சிவகங்கை ஆட்சியராக ஆஷா அஜித் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அனைத்து அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து குறைகள் தீர்க்கப்படும்.
மாவட்ட மக்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்துக்கும், வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் முயற்சி எடுக்கப்படும். மக்கள் தங்களது குறைகளை நேரடியாகவும், ஆன்லைன், மொபைல் வழியாகவும் தெரிவிக்கலாம். கிராபைட் தொழிற்சாலையை மேம்படுத்த அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். சிப்காட் தொழிற்பூங்காவை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், மத்திய நறுமண பூங்காவை முழுமையாக செயல்படவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அறிவித்துள்ள காரைக்குடி டைடல் பூங்கா சிறப்பாக அமைக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் உடனிருந்தனர்.