ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று ஜி20 மாநாட்டின் கூட்டம் நடைபெறும் நிலையில், இது குறித்து மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்படும் சிக்கல்களை கலைய உருவாக்கப்பட்ட கூட்டமைப்புதான் ஜி20. இந்த நாடுகள் உலக உற்பத்தியில் சுமார் 85 சதவிகிதத்தையும், வணிகத்தில் 80 சதவிகிதத்தையும் கொண்டுள்ளன. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இந்த மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதற்கு முன்னோட்டமாக ஜி20 மாநாட்டின் பல்வேறு துறைகளை சார்ந்த கூட்டம் இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இன்று ஜம்மு காஷ்மீர் தலைநகரில் சுற்றுலாத்துறை சார்ந்த பணிக்குழுக் கூட்டம் இன்று தொடங்குகிறது. ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷமீர் சர்வதேச மாநாட்டு அரங்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கிறது. இதில் 60க்கும் அதிகமான சர்வதேச பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி, பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
அதேபோல இம்மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் சர்வதேச கூட்டம் இது என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. ராணுவம், ஸ்ரீநகர் போலீஸ், சிஆர்பிஎஃப், தேசிய பாதுகாப்புப் படை, கடற்படை கமாண்டோக்கள் என பலரும் ஜபர்வன் மலைத்தொடர் முதல் தால் ஏரி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர ட்ரோன் எதிர்ப்பு படை, தனியாக வாகன சோதனை சாவடிகள், வெடிகுண்டு பரிசோதனை செய்யும் நிபுணர்கள் என பாதுகாப்பு டைட் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, பாஜக மீதும் மத்திய அரசின் மீதும் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை பாஜக அபகரித்துவிட்டதாகவும், ஜி20 மாநாட்டின் சின்னம் அனைத்துக்கும் பொதுவாக இருக்க வேண்டும் ஆனால் ஒரேயொரு கட்சியை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். ஜி20 மநாட்டில் காட்டும் ஆர்வம் ‘சார்க்’ மாநாட்டை நடத்துவதில் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சார்க் நாடுகள் என்பது தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பாகும். இதில் இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், வங்கதேசம், மாலதீவுகள் ஆகியே நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. சர்வதேச அளவில் 1990களுக்கு முன்னர், சோவியத் ரஷ்யா அணி, அமெரிக்க அணி என உலகம் இரண்டாக பிரிந்து இருந்தது. இதில் ஏதாவது ஒன்றில் உலக நாடுகள் சேர்ந்திருந்தன. ஆசியாவுக்கும் இதே நிலைதான். சீனா, ரஷ்யா பக்கம் நின்றது. இந்தியாவும் தொடக்கத்தில் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தாலும் எந்த அணியிலும் சேரவில்லை.
இப்படி அணி சேராமல் சில நாடுகள் இருந்தன. இந்த நாடுகளை ஒன்றிணைக்க முயற்சி செய்யப்பட்டது. அப்படி 1958ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதில் ஆப்கானிஸ்தான் பின்னர்தான் சேர்க்கப்பட்டது.