கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து சித்தராமையா பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் சித்தராமையா கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். சித்தராமையாவுக்கு அம்மாநில கவர்நர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதே போல் கர்நாடக மாநில துணை முதல்வராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பதவியேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து அமைச்சர்களாக 8 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், கர்நாடக சட்டசபை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இன்று முதல் 25-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பேரவை தலைவர் ஆர்.வி. தேஷ்பாண்டே உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். பேரவையின் புதிய தலைவர், கூட்டத் தொடரின் போது தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.