பெங்களூரு,
16வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நாளை சென்னையில் தொடங்க உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ அணிகள் எளிதாக முன்னேறிய நிலையில் எஞ்சிய ஒரு இடத்துக்கு பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இதில் நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி கோலியின் அதிரடி சதம் மூலம் 197 ரன்கள் குவித்தது. இதையடுத்து 198 ரன்கள் குஜராத் அணி எடுத்தால் வெற்றி பெறுவதோடு மும்பை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் சுப்மன் கில் அபாரமான ஆட்டத்தால் குஜராத் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்ததன் மூலம் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த நிலையில், பெங்களூரு அணி வெளியிட்டுள்ள உருக்கமாக டுவிட்டர் பதிவில், “நேற்றைய போட்டியில் இறுதிவரை இடைவிடாமல் போராடினோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. எல்லா நேரங்களிலும் எங்களை ஆதரிக்கும் ரசிகர்களுக்கு நன்றி. கோப்பையை நோக்கிய பயணம் முடிவுக்கு வந்தது வருத்தமளிக்கிறது. எங்கள் துக்கத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
இந்த சீசனில் ஒவ்வொரு உற்சாகத்திலும் சவாலிலும் எங்களுடன் நின்ற எங்கள் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். வானிலை அல்லது விளைவு எதுவாக இருந்தாலும், உங்கள் அசைக்க முடியாத ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. உங்கள் ஆர்வத்தையும் அன்பையும் எங்கள் இதயத்தில் சுமந்து செல்கிறோம். எங்களை நம்பியதற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளது.