கடந்த 2021ம் ஆண்டு
ஆட்சி அமைத்தது முதலே விடியா அரசு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தமிழகத்தில் போதை பொருள் அதிகரித்து விட்டது, சட்டம் ஒழுங்கு சரியில்லை, ஊழல் அரசு என பல்வேறு வகையான விமர்சனங்களை செய்து வருகிறார். இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தனர்.
கள்ளச் சாராய மரணங்கள் உள்ளிட்ட திமுக ஆட்சியின் சீர்கேடுகளைக் கண்டித்து இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. திமுக ஆட்சியில் நடைபெறும் கள்ளச் சாராய மரணங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் R.N.ரவியிடம் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஈபிஎஸ் கூறும்போது, ‘‘திமுக அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகள் என்ற தலைப்பில் துறை ரீதியான ஊழல் குற்றச்சாட்டு, சட்டம் – ஒழுங்கு சீர்கேடு மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அளுநரிடம் அளித்த மனுவில் தெளிவாக கூறியுள்ளோம். கிராம நிர்வாக அதிகாரியை மணல் கொள்ளையர்கள் படுகொலை செய்கின்றனர். அரசு ஊழியர்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.
திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் கொடிகட்டி பறக்கின்றன. இது தொடர்பாக ஆளுநரிடம் ஆதாரத்துடன் கூறியுள்ளோம். வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியிவில்லை. இது தொடர்பாக நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரவுடிகளும், குற்றவாளிகளும் காவல் துறையைக் கண்டு பயப்படுவது இல்லை. எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசுதான் இந்த விடியா திமுக அரசு.
தமிழகத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள் குறித்தும், மக்கள் படும் அவதிகள் குறித்தும் முழுமையாக ஆளுநரிடம் தெரிவித்து இருக்கிறோம். கள்ளச் சாராய சாவு, போலி மதுபான சாவு நடந்துள்ளது. தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் காலை 11 மணிக்கு விற்கப்பட்ட மதுவை அருந்திய 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். மரக்காணம், செங்கல்பட்டு சம்பவத்தை தொடர்ந்து அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால் நேற்று 2 உயிர்கள் பறிபோய் இருக்காது. பொம்மை முதல்வர், திறமையற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இரண்டு உயிர்களை இழந்து இருக்கிறோம்.
இரண்டு ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்தும், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு குறித்தும், பல்வேறு துறை ரீதியான புகார்களை தொகுத்து ஆளுநரிடம் புகார் மனுவாக அளித்துள்ளோம். நாங்கள் அளித்த புகாரை பரிசீலனை செய்வதாக ஆளுநர் உறுதி தெரிவித்துள்ளார்’’ என அவர் கூறினார்.