கேரளாவில் இருந்து லாரியில் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் – 2 பேர் கைது.!!
தென்காசி மாவட்டத்தில் புளியரை பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடி வழியாக கேரளத்தில் இருந்து ஏராளமான லாரிகள் தமிழகத்திற்கு வருகின்றனர். இந்த லாரிகள் தமிழகத்தில் இருந்து காய்கறி, இறைச்சி உள்ளிட்டவற்றை கேரளத்திற்கு கொண்டு செல்கின்றது.
அப்படி செல்லும் இந்த லாரிகள், திரும்பி வரும்போது சில ஓட்டுனர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் காவல்துறையினரும் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் போலீசார் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த இரு லாரிகளைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அந்த லாரிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து, ஓட்டுனர்களையும் கைது செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெபா நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்தக் கழிவுகள் மண் வளத்தையே கெடுக்கும் தன்மை கொண்டவை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சோதனைச் சாவடியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.