இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகராக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு, மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தவும், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விளையாட்டு சூழலை உருவாக்கிடவும், அரசிற்கும், பங்குதாரர்களுக்கும் இடையில் தடையற்ற ஒருங்கிணைப்பை அடைவதற்கும், பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து பெறக்கூடிய நன்மைகளைப் பயன்படுத்துவதற்கும், “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை” (Tamil Nadu Champions Foundation) என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் 8.5.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் உருவாக்கம், உறுப்பினர்கள் மற்றும் இயக்குநர் குழுவின் செயல்பாடுகள் ஆகியவை தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரை தலைவராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளரை துணைத் தலைவராகவும் கொண்ட ஏழு பேர் அடங்கிய நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர், தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்தை வழங்கியுள்ளார்.