கொல்கத்தா,
தி கேரளா ஸ்டோரி படம் டிரைலர் வெளியீட்டின்போது, பெரும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள தொடங்கியது. முதலில், கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் டிரைலர் காட்சிகள் அமைந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
படம் சட்டரீதியாக சில விசயங்களை எதிர்கொண்டு, அதனால் படத்தின் டிரைலர் ஆனது 32 ஆயிரம் பெண்களை பற்றிய விசயம் என்பதில் இருந்து, பட காட்சிகளில் தோன்ற கூடிய 3 பெண்களை பற்றியது என மாற்றும் கட்டாயத்திற்கு ஆளானது.
இந்த படத்தில் அவர்கள் 3 பேரையும் லவ் ஜிகாத் என்ற பெயரில் மோசடி செய்து, பின்னர் கர்ப்பமடைய செய்து, அதன்பின் ஈராக் மற்றும் சிரியாவுக்கு நாடு கடத்தி, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைய செய்த விவரங்களை படம் உள்ளடக்கி உள்ளது.
திரைப்படத்தில் நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களையேற்று நடித்து உள்ளனர். நாட்டில் வெறுப்பை பரப்பும் நோக்கோடு படம் அமைந்து உள்ளது என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கு அளித்து உள்ளார். உத்தர பிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத்தும் வரி விலக்கு அறிவித்து உள்ளார்.
எனினும், மேற்கு வங்காளத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க வேண்டி உள்ளது என்ற அடிப்படையில், படத்திற்கு அரசு தடை விதித்தது.
படம் வெளியானதும், கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. கேரளாவிலேயே பல திரையரங்குகள் பட வெளியீட்டுக்கு முன்வரவில்லை. தமிழகத்திலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேற்கு வங்காள அரசு படத்திற்கு தடை விதித்தது.
சட்டம் மற்றும் ஒழுங்கு நிலையை பராமரிக்கவே இந்த முடிவு என தெரிவிக்கப்பட்டது. எனினும், சுப்ரீம் கோர்ட்டு அந்த தடைக்கு கடந்த 18-ந்தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் திரையிடுவதற்கு 2 வாரங்களுக்கு போதிய இடமில்லை என திரையரங்க உரிமையாளர்கள் கூறி விட்டனர். புதிய படங்கள் வரவுள்ள நாட்களில் வரிசையாக, வெளிவர இருக்கின்றன. இதனால், அவை முன்பே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
அதனால், தி கேரளா ஸ்டோரி படம் திரையிடுவதற்கு 2 வாரங்களுக்கு திரையரங்கங்களில் இடம் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.
இதுபற்றி பிரியா என்டர்டெயின்மென்ட் திரையரங்க மேலாண் இயக்குநர் ஆரிஜித் தத்தா கூறும்போது, படம் ஒரு பிளாக்பஸ்டர் படமே. ஆனால், அடுத்த 2 வாரங்களுக்கு திரையரங்கங்களில் படங்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
அவற்றை நாங்கள் ரத்து செய்ய முடியாது. 2 அல்லது 3 வாரங்களுக்கு பின்னர், தி கேரளா ஸ்டோரி படம் திரையிடுவது பற்றி நாங்கள் யோசிக்கலாம் என கூறியுள்ளார்.
படத்துக்கு தடை விதிக்கும் முன் ஆரம்ப நாட்களில் நன்றாக ஓடியது. மேற்கு வங்காளத்தில் 50 நாட்கள் திரையரங்கங்களில் படம் ஓடும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது என அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு அரசு விதித்த தடைக்கு, சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டும், அதுபற்றி மாநில அரசு இதுவரை எந்தவித புதிய சுற்றறிக்கையையும் வெளியிடவில்லை.