பெங்களூரு,
நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இதில், குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிபட்டியலில் முதல் மற்றும் 2ம் இடத்தில் உள்ளன. லக்னோ 3-ம் இடத்திலும், மும்பை 4 ம் இடத்திலும் உள்ளன.
லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில் குவாலிபையர் சுற்றின் முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது. குஜராத் – சென்னை அணிகள் குவாலிபையர் 1-ல் மோத உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில், பெங்களூருவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி குஜராத் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. இப்போட்டியில் 52 பந்துகளில் 104 ரன்கள் விளாசி குஜராத் வெற்றிக்கு சுப்மன் கில் வழிவகுத்தார்.
போட்டிக்கு பின் பேசிய சுப்மன் கில், எனக்கு என் விளையாட்டு தெரியும். எந்த வீரராக இருந்தாலும் சரி நீங்கள் யார் என்பதை நீங்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியம். குவாலியபையர் 1-ல் சென்னையில் விளையாட எங்களிடம் சிறந்த பவுலிங் உள்ளது. சென்னை மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக விளையாடுவது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு நாங்கள் செல்வோம் என நம்பிக்கை உள்ளது’ என்றார்.