டெல்லி அரசின் உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு ஆணையம் அமைத்து மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கும் விவகாரத்தில், ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லியின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல்போக்கு நீடித்து வருகிறது.
இதற்குத் தீா்வு காண உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு தொடுத்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமா்வு நிலம், காவல், பொது உத்தரவு ஆகியவை தவிர அனைத்து விவகாரங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் உரிமை உள்ளது என்று தீா்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து, உயரதிகாரிகளின் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்வதை முடிப்பதற்கு டெல்லி முதல்வா், தலைமைச் செயலா், முதன்மைச் செயலர், உள்துறை அமைச்சா் ஆகியோா் அடங்கிய ‘தேசிய தலைநகா் சிவில் சர்வீஸ்’ ஆணையத்தை அமைத்து, மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை அவசரச் சட்டம் பிறப்பித்தது.
டெல்லி அரசின் பணி நியமன அதிகாரத்தை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த அவசரச் சட்டம், உச்ச நீதிமன்ற அவமதிப்பு என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில், டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவாலை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பீகார் முதல்வா் நிதிஷ் குமாா், இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசுக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “இந்த விவகாரம் தொடா்பாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவா்களிடமும் ஆதரவு கோருவேன்.
நடைமுறையிலுள்ள விதிகளை மாற்ற மத்திய அரசு கொண்டு வரும் இந்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாது” எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸின் ஆதரவு நிலைப்பாடு அரசியல் அரங்கில் கவனம் பெற்றிருக்கிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இந்த மாத இறுதிக்குள் மாபெரும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.