கலிபோர்னியா: வெகு விரைவில் ட்விட்டருக்கு போட்டியாக டெக்ஸ்ட் அடிப்படையிலான செயலியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெக்ஸ்ட் அடிப்படையிலான அந்த செயலியை சோதனை ரீதியாக தற்போது பயன்படுத்தி வரும் பயனர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
இந்த செயலி இன்ஸ்டாவில் இருந்து முற்றிலும் தனித்து இயங்கும் எனத் தெரிகிறது. இன்ஸ்டா பயனர்கள் தங்களது இன்ஸ்டா கணக்கு மூலம் இந்த புதிய செயலியை பயன்படுத்த முடியுமாம். இது ட்விட்டருக்கு மாற்றாக உள்ள தளங்களுக்கு போட்டியாக விளங்கும் என்றும், வரும் ஜூன் மாதம் இந்த செயலி அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இது குறித்து இன்ஸ்டா தரப்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் வாங்கி இருந்தார். அது முதலே பல்வேறு மாற்றங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். நிர்வாக ரீதியாகவும், சமூக வலைதளத்திலும் இந்த மாற்றங்களை மஸ்க் மேற்கொண்டுள்ளார். அது ட்விட்டர் பயனர்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதே நேரத்தில் ட்விட்டர் தளத்தின் எதிர்காலம் குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த நிலையில் இன்ஸ்டா தரப்பில் டெக்ஸ்ட் அடிப்படையிலான செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.